ஓ.பி.எஸ் பெயரில் 5 பேர் போட்டி: ரவுண்ட் கட்டும் ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிடுவது, தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சுயேச்சை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தி.மு.க., கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனியும் அ.தி.மு.க., சார்பாக ஜெயபெருமாளும் போட்டியிடுகின்றனர்.
நேற்று பங்குனி உத்திரம் என்பதால் தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. நேற்று ஒருநாளில் மட்டும் 405 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஓ.பன்னீர்செல்வமும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேநேரம், ராமநாதபுரம் மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தெற்கு காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒய்யாரம் என்பரின் மகன் பன்னீர்செல்வமும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட மேலும் 2 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒரே பெயரில் 5 பேர் சுயேச்சையாக களமிறங்கும்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வரக்கூடிய வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது இதேபோன்ற சிக்கலுக்கு வி.சி., தலைவர் திருமாவளவன் ஆளானதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து