ஜிண்டால் மேஜிக்: கட்சியில் சேர்ந்த ஒரு மணிநேரத்தில் வேட்பாளர் ஆனார்!
ஹரியானாவில் கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபருக்கு சீட் வழங்கியுள்ளது பா.ஜ., மேலிடம்.
ஹரியானாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், அரசியல் பெரும்புள்ளியுமான ஓ.பி.ஜிண்டாலின் இளைய மகன் நவீன் ஜிண்டால். ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர்.
குருஷேத்ரா லோக்சபா தொகுதியில் காங்., சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு வென்றவர். காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ராகுலுக்கு ஜிகிரி தோஸ்து.
ஹரியானாவில் காங்., ஆட்சியின் போது இவரது தந்தை ஓ.பி.ஜிண்டால், மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது தாயார், சாவித்திரி ஜிண்டால், 2014 வரை அமைச்சராக இருந்தவர். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்ட நவீன் ஜிண்டால், பா.ஜ., வேட்பாளர் ராஜ்குமார் சைனியிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
இவர் மீதான நிலக்கரி ஊழல் விவகாரமே தோல்விக்கு காரணமானது. 2019ல் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான், காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணையப் போவதாக, நேற்று முன்தினம் காலை தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார் நவீன் ஜிண்டால். அதே வேகத்தில், பா.ஜ., பொதுச்செயலர், வினோத் தாவ்டே முன்னிலையில் மாலையே அக்கட்சியில் ஐக்கியமானார்.
பா.ஜ.,வின், 111 வேட்பாளர்கள் அடங்கிய 5வது பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. அதில், நவீன் ஜிண்டாலுக்கு குருஷேத்ரா தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. கட்சியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வரலாற்று சாதனை (!) படைத்தார் ஜிண்டால்.
கடந்த 2015ல் நடந்த நிலக்கரி சுரங்க ஏலத்தில் இவரது நிறுவனத்துக்கு இரண்டு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஏலத்தில் இவர் முறைகேடு செய்ததாக கூறி, அந்த சுரங்க ஒப்பந்தம் அரசால் ரத்து செய்யப்பட்டது. இவர் மீது நிலக்கரி ஊழல் வழக்குகள் மூன்று உள்ளன. அன்னிய செலாவணி விதிமீறலில் ஈடுபட்டுள்ள இவரது நிறுவனம் மீது, அமலாக்கத்துறை கண் வைத்துள்ளது.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு சேவை செய்வதற்காக காங்.,கில் இருந்து வெளியேறிய ஒரு மணிநேரத்தில், பா.ஜ., வேட்பாளரான ஜிண்டாலின் தியாகம் அளப்பரியது.
வாசகர் கருத்து