டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது எதிரொலி:31ல் 'இண்டியா' கூட்டணி பிரமாண்ட பேரணி
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், 'ஜனநாயகத்தை பாதுகாப்போம்' என்ற கோஷத்துடன்,எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி சார்பில், டில்லியில் வரும் 31ம் தேதி மெகா பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் செயல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் அமலாக்கத் துறை காவலில் உள்ளார்.
அலுவலகத்துக்கு 'சீல்'
இதை கண்டித்து, ஆம் ஆத்மி சார்பில் டில்லியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம் பெற்ற ஆம் ஆத்மியின் டில்லி ஒருங்கிணைப்பாளரும், மாநில அமைச்சருமான கோபால் ராய் மற்றும் காங்கிரசின் டில்லி தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ஆகியோர் நேற்று பேட்டியளித்தனர்.
அப்போது, கோபால் ராய் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். கட்சியின் அலுவலகத்துக்கு செல்ல முடியாதபடி, 'சீல்'வைத்துள்ளனர்.இது, கெஜ்ரிவாலுக்கு மட்டும் நடக்கவில்லை. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி; ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கும் குறிவைத்துள்ளனர்.
அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை வைத்து, எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது; தங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைஅச்சுறுத்தி பார்க்கிறது.
நாட்டின் நலனையும், நம் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, டில்லியில் வரும் 31ம் தேதி மெகா பேரணி நடத்த உள்ளோம். ராம்லீலா மைதானத்தில் இந்த பேரணி நடக்கும். இதில், இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்கும்.
டில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பாக, 'அரபிந்தோ பார்மா' நிறுவனத்தின் சரத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர், கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அடிபணிய வைக்க முயற்சி
அவர், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.,வுக்கு 60 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். அதன்பின், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.பா.ஜ.,வுக்கு எதிராக செயல்படுவோரை குறிவைத்து, பொய் வழக்குகள் பதிவு செய்து, மிரட்டி அடிபணிய வைக்க முயற்சிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அரவிந்த் சிங் லவ்லி கூறியதாவது:
எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி வைப்பது, டில்லி முதல்வரை கைது செய்வது என, தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் இருக்கும்படி மிரட்டி பார்க்க முயற்சிக்கின்றனர். டில்லியில் நடக்க உள்ள மெகா பேரணி, அரசியலுக்கானது அல்ல; நாட்டை மீட்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவாலின் முதல் உத்தரவு சிறைக்கு அனுப்பப்பட்டாலும், கெஜ்ரிவால் அங்கிருந்து முதல்வராக செயல்படுவார் என ஆம் ஆத்மி கூறி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள அவர், அங்கிருந்து டில்லி நிர்வாகம் தொடர்பான தன் முதல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கட்சி கூறியுள்ளது. இது குறித்து, மாநில அமைச்சர் ஆதிஷி கூறியதாவது: அமலாக்கத் துறை காவலில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால், கடிதம் வாயிலாக எனக்கு சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். டில்லியில் குடிநீர் வினியோகம் தொடர்பாக, துணை நிலை கவர்னருடன் பேசி, தீர்வு காணும்படி அதில் அவர் கூறியுள்ளார். அதை படித்தவுடன் எனக்கு கண்ணீர் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து