திராவிட கட்சிகள் மீது ஈர்ப்பு இல்லை: ராதிகா சிறப்பு பேட்டி
நடிகையாக பெயரும், புகழும் பெற்ற ராதிகா, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். பா.ஜ., வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
கனவில் வந்த வழிகாட்டுதலை தாண்டி பா.ஜ.,வுடன் ச.ம.க.,வை இணைத்தது ஏன்?
ஒன்றுபட்ட ஓர் அணியாக வலிமையான பாரதத்தை உருவாக்க, 10 ஆண்டு சிறப்பான ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக இணைத்தோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் சென்றடைந்துள்ளன. தனித்தனியாக போராடுவதற்கு பதில், வளர்ச்சியை உருவாக்கக்கூடிய சக்திவாய்ந்த, 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவை எப்படி மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையாளர்களுடன் பயணம் செய்வது சிறப்பாக இருக்கும் என்று இந்த முடிவை எடுத்தோம்.
ச.ம.க., கட்சி தொண்டர்கள் யாரும் பா.ஜ.,வில் வர ஆர்வம் காட்டவில்லையே...
இது தவறான தகவல். ச.ம.க.,வில் இருந்த பலரும் ஆர்வத்துடன் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமாக பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டி, பா.ஜ.,வுடன் கைகோர்க்க மகிழ்ச்சியாக வருகின்றனர். சமீபத்தில்கூட கேரள மாநிலத்தில் உள்ளோர் ஜாவடேகரை பார்த்து சேர்ந்து விட்டனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளில் நேரடியாகவும், ச.ம.க.,வில் இருந்தபோது திராவிட கட்சிகளின் கூட்டணிகளுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்துள்ளீர்கள். திராவிட கட்சிகளை தேர்ந்தெடுக்காததற்கு காரணம் என்ன?
அ.தி.மு.க.,விற்கு பிரசாரம் செய்யவில்லை. மேலும், எந்த கட்சியிலும் உறுப்பினராகவில்லை. தி.மு.க.,விற்கு மட்டும் செய்தேன். அதுவும் கருணாநிதி மீதான தந்தை போன்ற பாசத்திற்காகவும், என் தந்தைக்கும், அவருக்கும் உள்ள பழக்கத்தாலும் பிரசாரத்தில் ஈடுபட்டேன். எவ்வளவோ கட்சியில் சேர கேட்டனர். எனக்கு ஆர்வம் இல்லாததால் கட்சியில் சேரவில்லை. திராவிட கட்சிகளை தேர்ந்தெடுக்காததன் காரணம், அவை மீது ஈர்ப்பு இல்லாதது தான்.
ச.ம.க.,- - பா.ஜ., இணைப்பைசாத்தியப்படுத்தியது யார்?
என் கணவர் சரத்குமார் தான்.
ஏன் விருதுநகர் லோக்சபா தொகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?
இது, எங்களுக்கு தேசிய தலைமையால் கொடுக்கப்பட்ட தொகுதி. வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதி என்பதால் எங்களை அறிவித்துள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் உள்ள ஊர்களுக்கு, இதற்கு முன் பயணம் செய்து இருக்கிறீர்களா?
நான் விருதுநகர் தொகுதியில் நிறைய பயணம் செய்துள்ளேன்; எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளேன். காமராஜர் மணிமண்டபம் கட்டும் போதும், ச.ம.க., மாநாடு நடத்தும் போதும் நிறைய முறை நானும், கணவர் சரத்குமாரும் வந்துள்ளோம்; பிரசாரமும் செய்துள்ளோம்.
புதிதாக இணைந்துள்ள உங்களுக்கு, பா.ஜ.,வில் ஆதரவு எப்படி உள்ளது? கட்சி நிர்வாகிகள் பிரசாரத்திற்கு உதவி செய்கின்றனரா?
சிறப்பான ஆதரவு உள்ளது. பாலில் சர்க்கரை கலந்தால் எப்படி இருக்குமோ அது போன்று ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரமாதமாக பா.ஜ., இயங்குகிறது. நல்ல அலுவலக அமைப்பு. கார்ப்பரேட் அமைப்பு போல் உள்ளது. எல்லாமே 'சிஸ்டமைஸ்' செய்து ஆச்சரியப்படும் வகையில் சிறப்பாக பணி நடைபெற்று வருகிறது. பூத் கமிட்டி, மண்டலத் தலைவர்கள் எல்லாரும் நியமிக்கப்பட்டு உள்ளதால், இந்த தேர்தலில் எங்களுக்கு தான் வெற்றி. பிரசாரப் பணிகளிலும் வழி நெடுக தொண்டர்கள் ஆதரவு தருகின்றனர்.
மீண்டும் அமையும் மோடி ஆட்சிக்கு, விருதுநகரில் இருந்து பா.ஜ., - எம்.பி., செல்ல வேண்டும் என்கிறீர்கள். இதனால், விருதுநகருக்கு என்ன லாபம்? தொழில் வளம் மிக்க விருதுநகருக்கு மாநில அரசோடு இணக்கமாக இருப்பது தானே லாபம்?
தொழிலாளர்கள் நிறைந்த
மாவட்டம் இது. வறட்சியான அதே நேரத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்
மாவட்டமும் கூட. சிவகாசி பட்டாசு ஆலை அனுமதி, செயல்வரைவு எல்லாம் மத்திய
அரசின் 'பெசோ'விடம் இருந்து வர வேண்டும். சில பட்டாசு ஆலைகள் தான், மாவட்ட
வருவாய் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எல்லா தொழிலுமே மத்திய
அரசை சார்ந்து தான் இருக்கின்றன.
மாநில அரசின் சார்பு, அனுமதி
மற்றும் உரிமம் தருவதில் தான் உள்ளது. என்னை பொறுத்தவரையில் நாடு தான்
முக்கியம். ஒரு நாடு வளர்ந்தால் மாநிலங்களும் சேர்ந்து வளரும். மத்திய அரசு
ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கும் போது, மாநிலங்களில் தொழில் வளம்
அதிகமாகும். விருதுநகரில் எய்ம்ஸ், ஜவுளி பூங்கா என நிறைய திட்டங்கள்
தயாராக உள்ளன.
சரத்குமார் ஏன் போட்டியிடவில்லை?
அனைத்து இடங்களுக்கும் சென்று, நடந்து கொண்டிருக்கும் ஊழல் மிகுந்த தி.மு.க., ஆட்சியை, 2026ல் அகற்ற வேண்டும் என பிரசாரம் செய்கிறார். இருவரும் போட்டியிட்டால் தேர்தல் பணிகளில் பளு அதிகமாகி, பிரசாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர் போட்டியிடவில்லை.
தமிழக அரசியல், டில்லி அரசியல் இவற்றில் எதன் மீது நாட்டம் அதிகம்?
எனக்கு அரசியல் மீதே நாட்டம் அதிகம். பொதுநல சேவையின் அடுத்தக்கட்டம் அரசியல். 100 ரூபாய் சம்பாதித்தால், 10 ரூபாய் மக்களுக்கு செலவிட்டு நல்லது செய்ய நினைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது திட்டங்கள், செயல்பாடு மூலம் மக்களுக்கு நிறைய சேவை செய்யலாம். அரசியல் என்பது பலம் தான்; உதவுவதற்கான கருவி. பிரச்னைகளை எடுத்து சொல்லும் இடம் சட்டசபை, மற்றொன்று லோக்சபா. அங்கே குரல் கேட்கப்படும். சேவை செய்ய வந்துள்ளோம். எங்களது நோக்கம் எல்லாம், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்.
வாசகர் கருத்து