இரண்டாம் இடத்திற்கு போராடும் அ.தி.மு.க.,
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே தி.மு.க., பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுவிடும், என்கிற அளவில் தற்போதைய தேர்தல் களம் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்காக தான் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., மோதிக் கொள்கின்றன. இந்த நிலைக்கு அ.தி.மு.க., எப்படி வந்தது?
தனக்கான வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை ஒரு தேர்தல் பிரச்னையாக பெரிய அளவில் மாற்றுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. எல்லா கிராமங்களிலும், 'கூல் லிப்', குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன. பள்ளி குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் அன்றாடம் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். பல மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக இருக்கும் காரணத்தால், இதை கையிலெடுக்க பா.ஜ., பயப்படலாம். ஆனால் அ.தி.மு.க., பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பழனிசாமிக்கு பயம்
ஜெயலலிதா, இரும்பு கரம்கொண்டு, லாட்டரி மார்டினை சட்டவிரோத செயல்களில் இருந்து அப்புறப்படுத்தி, சிறையில் வைத்திருந்தார். ஆனால், தேர்தல் பத்திர விவகாரத்தில் தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மார்டினிடம் பெரும்பலன் அடைந்து இருக்கின்றன. இதை பயன்படுத்திக் கொள்வதில் எடப்பாடி பழனிசாமி எந்த முனைப்பும் காட்டவில்லை.
மத்திய பா.ஜ.,வின் மீது, ஆதாரப்பூர்வமான, கடுமையான எந்த விமர்சனத்தையும் எடுத்து வைக்காததால், பழனிசாமி இன்னும் பா.ஜ.,வை கண்டு பயப்படுகிறார், வழக்குகளை கண்டு அஞ்சுகிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சிறுபான்மையினரும் நம்ப மறுக்கின்றனர். தி.மு.க.,வின் மீதும், கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற துறைவாரியான ஊழல்களை பட்டியலிட்டு பெரிய அளவில் புள்ளி விபரங்களுடன் கூடிய எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைக்கவில்லை.
சமீபத்திய கெஜ்ரிவால் கைது, தெலுங்கானாவில் கவிதா கைது, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அமலாக்க துறை சோதனை போன்றவை தேர்தல் காலத்தில் நடைபெறுவது, இதுவே வரலாற்றில் முதல்முறை. இதையும் பழனிசாமி பயன்படுத்தவில்லை. மாறாக, தி.மு.க., பொன்முடி விவகாரத்தை மிக அழகாக பயன்படுத்தி வருகிறது.
அண்ணாமலை, பெரிய அளவில் சமூக ஊடகம் மற்றும் ஊடக பலத்தை பயன்படுத்தி தி.மு.க., எதிர்ப்பு வாக்குகளை பெற முயற்சிக்கிறார். தி.மு.க.,வும் பா.ஜ.,வுக்கு எதிரான சித்தாந்த அரசியலை கையாண்டு பா.ஜ., எதிர்ப்பு வாக்குகளை பெற முயற்சிக்கிறது.
இந்த மூன்றாண்டு கால ஆட்சி யினால் வீழ்த்தப்பட வேண்டிய தி.மு.க., பழனிசாமியின் விவேகமற்ற அணுகுமுறையால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறது.
வாய்ப்புகளை, பழனிசாமி இப்படி தவறவிட்டார் என்றால், கூட்டணி அதற்கு மேல் அவலம். 'மெகா கூட்டணி அமைப்பேன், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் களப்பணியை நீங்கள் பாருங்கள்' என்கிற அளவில் துவங்கி, இன்று அரை சதவீதம் வாக்கு வங்கி உள்ள தே.மு.தி.க.,வுக்கு, 5 தொகுதிகளை கொடுத்து, கூட்டணி அமைக்க வேண்டிய நிலைக்கு அ.தி.மு.க.,வை தள்ளி விட்டார். மன்சூர் அலிகானுடன் கூட்டணி பேசியதை பார்த்து ஊரே சிரிக்கிறது.
தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் பல முக்கிய பொறுப்பாளர்களும் களத்தில் இருக்கும் போது, அதி.மு.க., முக்கிய பொறுப்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாதது ஒரு நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
எந்த இலக்குமே இல்லாமல் அரசியலுக்கே புதியவர்களை, சமீபத்தில் வேறு கட்சியிலிருந்து வந்து சேர்ந்தவர்களை, பணபலம் படைத்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக வேட்பாளர்களாக்கி, இந்த தேர்தலில் கிடைப்பதை, தனக்கான ஓட்டுகளாக சித்தரிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க., என்கிற கட்சிக்கான ஓட்டுகளாக மட்டுமே அவை அமையும்.
சிதைக்கப்படுகிறது
கடந்தகால எல்லா பார்லிமென்ட் தேர்தலிகளிலுமே யார் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறுகின்றனரோ அவர்களே அடுத்து வருகிற சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சி அமைத்திருக்கின்றனர். பார்லிமென்ட் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல என்ற பழனிசாமியின் எண்ணம், 2026ல் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அ.தி.மு.க., தொண்டனின் உணர்வுகளுக்கு ஏற்ப இல்லை.
இந்த தேர்தலில், 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை என்றால், 2025ம் ஆண்டு இறுதிக்குள் அ.தி.மு.க.,வை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ., முன்னெடுக்கும். அதை எத்தனை முன்னாள் அமைச்சர்கள் தாங்கி நிற்பர் என்பது தெரியவில்லை.
ஒரு வலிமையான இயக்கம், மிகப்பெரிய ஓட்டு வங்கியை கொண்ட இயக்கம், கட்சிப்பற்று அதிகமுள்ள விசுவாசிகளை கொண்ட இயக்கம், சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி என்கிற சுயநலவாதிகளால் சிதைக்கப்படுவது மனவேதனையை தருகிறது.
இந்த நான்கு பேரையும் புறக்கணித்து விட்டு நல்ல தலைமையை பார்லிமென்ட் தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்க அ.தி.மு.க., தொண்டர்கள் முன் வருவர்.
வாசகர் கருத்து