உதயநிதியும் ஆ.ராசாவும் விரைவில் சிறைக்கு செல்வார்கள்: பழனிசாமி கணிப்பு
"ஊர் ஊராக சென்று ஒருவர் அ.தி.மு.க.,வை விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் தேர்தல் முடிவதற்குள் சிறைக்குப் போவாரா... தேர்தல் முடிந்து சிறை செல்வாரா என்பது விரைவில் தெரிய வரும்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
உதகையில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் நீலகிரி மாவட்ட மக்களைத் தான் ஜெயலலிதா அதிகம் நேசித்தார். அ.தி.மு.க., உடன் ஒன்றி இணைந்த மாவட்டமாக நீலகிரி இருக்கிறது.
எங்களை எதிர்த்து தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அவருக்கு ஓட்டுப் போட்டு பயனில்லை. இந்த நாட்டுக்காக பாடுபட்டவர்களை எல்லாம் அவர் மதிப்பது இல்லை. மக்களையும் மதிப்பது இல்லை.
காற்றை யாராவது பார்க்க முடியுமா. அதில் கூட ஊழல் செய்தவர் தான், அந்த வேட்பாளர். காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி, தி.மு.க., தான். இந்த நாடு தலைகுனிந்து நிற்கும் அளவுக்கு மெகா ஊழல் செய்த கட்சி, தி.முக.,
2ஜியில் 1,76,000 கோடி ஊழல் செய்ததாக திகார் சிறையில் தி.மு.க., வேட்பாளரை அடைத்தனர். அப்போது காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சரவையில் தி.மு.க., அங்கம் வகித்தது.
ஆ.ராசா, கனிமொழி என இருவர் மீதும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைத்தனர். இப்போது மீண்டும் வழக்கு விசாரணை வர உள்ளது. அவர் மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அவர் எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரியும்.
தி.மு.க.,வை சேர்ந்த ஒவ்வொருவரும் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒருவர் பாதுகாப்பாக சிறையில் இருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு, தி.மு.க., அரசு தான். அவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்?
தமிழகத்தில் போதைப் பொருள் இல்லாத இடமே இல்லை. இவர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. காரணம், தி.மு.க.,வினரே போதைப்பொருள்களை விற்கின்றனர்.
தி.மு.க.,வின் அயலக அணியை சேர்ந்த ஒருவர் பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர் ஊராக சென்று ஒருவர் அ.தி.மு.க.,வை விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் தேர்தல் முடிவதற்குள் சிறைக்குப் போவாரா.. தேர்தல் முடிந்து சிறை செல்வாரா என்பது விரைவில் தெரிய வரும். (ஜாபர் சாதிக்குடன் முதல்வரும் உதயநிதியும் இருக்கும் படத்தைக் காட்டுகிறார்)
போதைப்பொருள் கடத்தல் நபருடன் இவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்திய நபருடன் உங்களுக்கு என்ன தொடர்பு என்று மக்கள் கேட்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில், என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்று சொன்னால் அது நல்ல அரசு என்று சொல்லலாம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். என்னைப் பற்றியும் கட்சியைப் பற்றியும் அவதூறாக பேசுவதைத் தான் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு எந்த பெரிய திட்டத்தையாவது ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறாரா. ஒரு துரும்பைக் கூட நீலகிரியில் கிள்ளிப் போடவில்லை. ஜெயலலிதா அடிக்கடி வந்த மாவட்டம் என்பதால் நீலகிரியை ஒதுக்கி வைத்திருக்கிறார்.
பார்லிமென்டில் இவ்வளவு ஆண்டுகாலம் இருந்தார்களா, எந்த திட்டத்தையாவது நீலகிரிக்கு கொண்டு வந்தார்களா. நாங்கள் ஆட்சியில் இருந்த வரையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம்.
ஊட்டியில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள அரசு மருத்துமனைக்குத் தான் மக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதை மாற்றி 400 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தோம்.
ஆனால், இவர்கள் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வைத்து, இவர்கள் எப்படி பெயரை வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்று பாருங்கள். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறார்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து