ஓட்டு எண்ணிக்கையில் அதிக கவனம் தி.மு.க., முகவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
மதுரை: ''லோக்சபா தேர்தல் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்'' என தி.மு.க., முகவர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேசினார்.
மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு, மேலுார், தேனி தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் தி.மு.க., முகவர்களுக்கான பயிற்சி முகாம் காணொலி மூலம் நடந்தது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார்.
சட்டத்துறை செயலாளர் இளங்கோ பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவு அறிவித்தபின்தான் முகவர்கள் வெளியே வர வேண்டும். வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் வெளியே வந்துவிடக்கூடாது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதை எக்காரணம் கொண்டு நிறுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். ஏற்க வேண்டிய தபால் ஓட்டுகளை நிராகரித்தும், நிராகரிக்க வேண்டியதை ஏற்றுக் கொண்டும்தில்லு முல்லு செய்ய வாய்ப்புள்ளது. போலி தபால் ஓட்டுகளை கண்டறிந்து புகாரளிக்க வேண்டும். அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் 'சீல்' வைக்கப்பட்டதில் ஏதும் மாற்றம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழா ஜூன் 3 ல் கொண்டாடப்படும். கோயில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு நல உதவி வழங்கப்படும். பாண்டிகோயில் ரிங்ரோடு அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் தி.மு.க.,வினர் கடந்த சட்டசபை தேர்தலைவிட தற்போது லோக்சபா தேர்தலில் அதிகமாக உழைத்துள்ளனர். மதுரை தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்றார்.
எம்.எல்.ஏ., வெங்கடேசன், மதுரை வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன் பங்கேற்றனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், ''கருணாநிதியின் பிறந்தநாளை அனைத்து பகுதிகளிலும் கொண்டாட வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், லதா, நகர் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, சண்முகம், மதன்குமார், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து