மத்தியிலும் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஸ்டாலின்: பழனிசாமி
"தமிழகத்திற்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருந்தபோது குடும்பத்தை மட்டும் தான் பார்த்தார்கள். மக்களை கண்டுகொள்ளவில்லை" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
திருச்சியில் அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. அப்போது, பழனிசாமி பேசியதாவது:
இந்த தேர்தலில் மூன்று பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. போட்டி என வரும் போது தி.மு.க.,- அ.தி.மு.க., மட்டும் என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த 3 நாட்களாக பிரதமரை ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
அடுத்து, என்னை விமர்சிக்கிறார். இதைத் தவிர அவரிடம் வேறு சரக்கு இல்லை. ஒரு பொம்மை முதல்வரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர், எம்.ஜி.ஆர். அதைக் காத்தவர், ஜெயலலிதா.
அவர்கள் வழியில் சிறப்பான ஆட்சியை நாங்கள் வழங்கினோம். எங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் உங்கள் ஆட்சியை அலங்கோல ஆட்சி என்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை.
எங்கள் ஆட்சியில் 11 அரசு மருத்துவ கல்லுாரிகள், 6 சட்டக் கல்லுாரிகள் என கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றினோம். 3 ஆண்டுகளில் உங்களால் ஒரு மருத்துவக் கல்லுாரியை கொண்டு வர முடிந்ததா. கடந்த 3 வருடங்களாக உதயநிதி செங்கல்லை காட்டி வருகிறார்.
இதே செங்கல்லை பார்லிமென்ட்டில் காட்டலாமே. சாலையில் காட்டி என்ன பயன்? 38 எம்.பி.,க்களும் அங்கே போய் காட்ட வேண்டியது தானே. அதைக் காட்டும் திராணி அவர்களிடம் இல்லை.
2010ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க., அங்கம் வகித்தபோது கொண்டு வரப்பட்டது தான், நீட் தேர்வு. அரசுப் பள்ளியில் 41 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். நான் முதல்வராக இருந்த போது மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்பதால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினேன். இதன்மூலம் ஆண்டுதோறும் ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில்கின்றனர். இது தான் எங்கள் ஆட்சியின் சாதனை.
வெறும் வெற்று அறிவிப்பின் வாயிலாக மக்களை ஏமாற்ற முடியாது. மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும். அங்கேயும் இங்கேயும் கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார்.
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம். நாட்டு மக்கள் அவருக்கு முக்கியமில்லை.
டெல்டா பகுதியில் விவசாயிகள் அச்சத்தில் இருந்தார்கள். காரணம், விவசாயிகளின் நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தில் ஒப்பந்தம் போட்டவர், ஸ்டாலின். 'எங்களைக் காப்பாற்றுங்கள்' என விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். மத்தியில் எடுத்துச் சொல்லி அதை தடுத்தோம்.
'கர்நாடகாவில் மேக்கேதாட்டு அணையை கட்டுவோம்' என அங்குள்ள அரசு பேசுகிறது. இதற்கு ஏன் ஸ்டாலின் வாயை திறக்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது அணை கட்டுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
தமிழகத்திற்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருந்தபோது குடும்பத்தை மட்டும் தான் பார்த்தார்கள். மக்களை கண்டுகொள்ளவில்லை. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தி.மு.க., தப்பிக்கவே முடியாது.
தி.மு.க.,வில் அயலக அணி என்பதே ஏதோ கடத்தலுக்கு மட்டும் வைத்திருப்பது போல இருக்கிறது. தமிழகம் போதைப் பொருள் மாநிலமாக மாறுவதற்கு தி.மு.க., தான் காரணம். கஞ்சா வைத்திருப்பவர்களை கைது செய்யாததற்கு காரணம், அதில், தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டிருப்பதால் தான்.
கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைத்த ஸ்டாலின், எங்கள் ஆட்சியைப் பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் 656 கோடி ரூபாயை தி.மு.க வாங்கி உள்ளது. ஸ்டாலின் குடும்பம் தான் அதிக நிதியை வாங்கி உள்ளது.
எங்களை மிரட்டிப் பணிய வைக்க முடியாது. நான் நினைத்திருந்தால் எத்தனை முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்க முடியும். அ.தி.மு.க., தொண்டனுக்கு என்ன பிரச்னை வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம். தி.மு.க.,வின் மிரட்டலுக்கு அ.தி.மு.க., பயப்படாது.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து