உதயநிதி இனியும் விமர்சித்தால்... : அண்ணாமலை எச்சரிக்கை
"வாரிசு அரசியல் வாயிலாக அரசியலுக்கு வரும் நபர்களில் கொச்சையாக பேசுகிறவர்களில் உதயநிதிக்கு தான் முதலிடம். தொடர்ந்து மகளிரைப் பற்றி தவறாக பேசி வருகிறார்" என, கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை, நாளை மறுநாள் தமிழகம் வர இருக்கிறார். தேனியில் தினகரனையும் மதுரையில் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு கேரளா செல்கிறார். பிரதமரின் தமிழகம் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான்கைந்து நாள்களில் பிரதமர் வர இருக்கிறார்.
தினமும் ஒரு வார்த்தை... தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தல் கமிஷனை எதிர்த்து டில்லி உச்சநீதிமன்றத்துக்கு சீமான் சென்றார். அவர் சரியான நேரத்தில் சின்னத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. அவரின் தொண்டர்கள் கோபத்தில் இருப்பதால் என் மீதும் பா.ஜ., மீதும் குற்றம் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தினகரன், ஜி.கே.வாசன் போன்றோர் சரியான நேரத்தில் விண்ணப்பித்து கேட்டதால் சின்னம் கிடைத்தது. சீமான் விண்ணப்பிக்கவே இல்லை. வேறு ஒருவர் சீமானின் சின்னத்தை வாங்கிவிட்டார். இதில், பா.ஜ., எங்கே வந்தது?
நாங்கள் மனு கொடுத்த பிறகு சின்னம் கொடுக்கவில்லை என்றால் நாங்களே சீமானுக்கு ஆதரவாக இருந்திருப்பபோம். தமிழகத்துக்குள் அவ்வப்போது ஸ்டாலின் எட்டி பார்க்கிறார். ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பான் என பயணம் சென்றார்.
அவரது பயணத்தால் எந்தப் பயனும் இல்லை. எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்று தி.மு.கவினர் நினைக்கின்றனர். சிறிய கூட்டம் போட்டுவிட்டு கேரவனில் ஏறிச் சென்றுவிடுகிறார். சாலைக்கு வந்திருந்தால் களநிலவரம் தெரிந்திருக்கும்.
பிரதமரை போல ஸ்டாலினும் ரோடு ஷோவை நடத்தட்டும். அவரைப் பார்க்க எவ்வளவு பேர் வருகிறார்கள் எனப் பார்ப்போம். அவரே கட்டிய மாயக் கோட்டைக்குள் முதல்வர் அமர்ந்து கொண்டிருக்கிறார். பிரதமர் அளவுக்கு ஸ்டாலின் உழைக்கிறாரா எனப் பாருங்கள்.
கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்த பிறகு மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆர்.டி.ஐ., தகவலை அதிகாலை 2 மணிக்கு நானே டைப் செய்து வெளியிட்டதாகவும் கூறுகிறார்கள்.கச்சத்தீவு குறித்த உண்மையை பா.ஜ., கூறிய பிறகு தி.மு.க., ஏன் கதறுகிறது?
வாரிசு அரசியல் மூலம் அரசியலுக்கு வரும் நபர்களில் கொச்சையாக பேசுகிறவர்களில் உதயநிதிக்கு தான் முதலிடம். தொடர்ந்து மகளிரைப் பற்றி தவறாக பேசி வருகிறார். ஓர் அறைக்குள் நான்கு நண்பர்களுடன் பேசுவதை எல்லாம் பொதுவெளியில் பேசி வருகிறார்.
29 பைசா மோடி என உதயநிதியின் பேசினால், அவரை பீர், சாராயம், டாஸ்மாக், ட்ரக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை வைத்து நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்களும் நாடகம் நடத்துவதாக சொல்கிறோம். பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது. கச்சத்தீவு இந்தியாவுக்கு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
1974ல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு இன்று கேள்வி கேட்டால் அதை விமர்சிப்பதை ஏற்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது.
ஆட்டை பிரியாணி போடுவோம் என டி.ஆர்.பி.ராஜா பேசியிருக்கிறார். அந்த ஆட்டை கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடட்டும். ஜூன் 4ல் கோவையில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படும். மக்களின் மனதை டி.ஆர்.பி.ராஜாவால் மாற்ற முடியாது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து