யாருடைய சம்பந்தி அ.தி.மு.க., வேட்பாளர்?
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரின் சம்பந்தி, அ.தி.மு.க., வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க.,வில், 61 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தலைமையில் நடத்த நேர்காணலில், தலைமை பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலர் கமலகண்ணன் உட்பட ஆறு பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க., வேட்பாளரான தங்கவேல், உடல்நிலை காரணமாக நேர்காணலில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இது பற்றி அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமை வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கருதி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி வலுவான வேட்பாளர் என்றாலும் கூட, அவரது பொருளாதார நிலைமை காரணமாக, அவருக்கு மீண்டும் சீட் வழங்க விரும்பவில்லை. அப்படியிருக்கையில், தனக்கு போட்டியில்லாமலும், பணம் பலமிக்க வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய மாவட்ட அ.தி.மு.க., திட்டமிட்டது.
அதன் அடிப்படையில், கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலரான தங்கவேல் தேர்வு செய்யப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க.,விருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்து கட்சி பதவி பெற்றார்.
தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான, இன்னொரு டெக்ஸ்டைல்ஸ் பங்குதாரர் செல்வராஜின் சம்பந்திதான், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல்.
கடந்த, 2017, 2023 ஆண்டுகளில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, செல்வராஜின் ஜவுளி நிறுவனம், வீடுகளில் சோதனை நடந்தது.
இதன் வாயிலாக செந்தில் பாலாஜிக்கும், செல்வராஜுக்கும் உள்ள நெருக்கத்தை சொல்லி தெரிய வேண்டியதில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்த காங்., - எம்.பி., ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரின் சம்பந்தி அ.தி.மு.க.,வில் போட்டியிடுகிறார்.
இவ்வாறு கூறினர்.
திராவிட கட்சி வேட்பாளர்கள் எந்த வகையில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு, கரூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் உதாரணம்.
வாசகர் கருத்து