ஹிட் லிஸ்டில் ஆறு அமைச்சர்கள்
கடந்த சில நாட்களாகவே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை,ஏகப்பட்ட பணத்தையும் நகைகளையும் பிடித்து வருகின்றனர். வழக்கமாக, தேர்தல் நேரத்தில் சில லட்சங்கள் பிடிபட்டன என்று செய்திகள் வரும், அவ்வப்போது கோடி ரூபாய்க்கு மேல் பிடிபட்ட சம்பவங்கள் நடக்கும். இந்த தேர்தலில், கோடிகளில் பிடிபடுவது மிகவும் சாதாரணமாக இருக்கிறது. கடந்த மூன்று நாளில் மட்டும், ராசிபுரத்தில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள, 29 கிலோ தங்கம், சென்னை தி.நகரில், 8 கிலோ தங்கம், ஸ்ரீவில்லிபுத்துாரில், 6.30 கிலோ தங்கம் என, ரூ.12 கோடி மதிப்பிலான பொருட்களும், ரொக்கமும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா, 2,000 ரூபாய் நோட்டு ரத்து எல்லாவற்றுக்கு பிறகும் இவ்வளவு பிடிபடுவது, தேர்தல் ஆணையத்தை கவலையில் ஆழ்த்தி உள்ளது. மத்திய அரசின் உளவுத்துறையும் இதை கவனித்து வருகிறது.
சமீபத்தில், ஐ.பி., தமிழக கள நிலவரம் பற்றி மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது. அதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு இரண்டே தொகுதிகளில் தான் சாதகமான நிலை இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஒன்று, சவுமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதி, மற்றொன்று ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலுார் தொகுதி.
மற்ற தொகுதிகளில் ஆளுங்கட்சியின் பணபலம், ஆள் பலத்தை பா.ஜ.,வால் சமாளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. சில தொகுதிகளில் இறக்கப்படும் பணத்தின் தொகையை கேட்டு, 'இவ்வளவா செலவு செய்வார்கள்!' என்று எதிர்முனையில் பேசும் அதிகாரிகள் ஆச்சரியப்பட்டதாக, இங்குள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பா.ஜ., தலைமை தங்கள் கட்சியின் தமிழக தலைவர்களை உஷார்படுத்தியதோடு, உடனடியாக, பல்வேறு மத்திய அமைச்சர்களை தமிழகத்தில் பிரசார பணிக்கு அனுப்ப முடிவு செய்தது.
ஏற்கனவே பலமுறை தமிழகம் வந்து சென்ற பிரதமரும், மேலும் மூன்று முறை வந்து பிரசாரம் செய்ய, அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு பக்கம் இது நடக்க, மற்றொரு பக்கம் எதிர்கட்சிகளின் பண பலத்தை முடக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.
இது பற்றி மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அமைச்சரவையில் உள்ளவர்களில் அதிக பணபலம் படைத்த அமைச்சர்கள் யார் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஆறு பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.
அந்த ஆறு பேரையும் வருமான வரி துறையும் அமலாக்க துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. ஆனால், இந்த முறை யாரும் நேரடியாக ரெய்டுக்கு ஆளாகமாட்டார்கள்.
பொன்முடி விஷயத்தில், தி.மு.க., ஜெயித்துவிட்டது. அதனால், அவர்களுக்கு அனுதாபம் உருவாகி இருக்கிறது. இதனால், அந்த அமைச்சர்களை சுற்றி உள்ளவர்கள், அவர்களது விவகாரங்களை கவனித்துக் கொள்பவர்களுக்கு ரகசியமாக கிடுக்கிப்பிடி போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேவையானால் மட்டும் ரெய்டு நடத்தப்படும்.
இது தவிர, ஏற்கனவே மத்திய நிறுவனங்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஆளும் கட்சியின் பணபலம் கட்டுப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
அவர் சொல்வதற்கு ஏற்ப தி.மு.க., வட்டாரங்களில் விசாரித்ததில், சமீபத்தில் மத்திய நிறுவன கேள்விக்கு ஆளான ஒருவர், தற்போது, பா.ஜ.,வை தாக்கி பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறாராம். கட்சி வேட்பாளரின் பிரசாரத்திற்காக பணத்தை எடுப்பதில்லையாம்.
வாசகர் கருத்து