தி.மு.க., இஸ்லாமிய தோழனா?

தாங்கள் தான், பா.ஜ.,விடம் இருந்து தமிழக இஸ்லாமியர்களை காக்கும் கட்சி என தி.மு.க., சுய விளம்பரம் செய்துகொள்கிறது. இஸ்லாமியர்கள் காக்கப்பட வேண்டும் என்ற பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது யார்?

1992ல் பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்து நடந்த கலவரமும், இந்தியாவின் பிற பகுதிகளில், இஸ்லாமியர்களுக்கு எதிரான அலை உருவாக செய்தன. இதை வைத்து தான் பா.ஜ.,வை இஸ்லாமியர்களின் ஒரே எதிரியாக தி.மு.க., தொடர்ந்து சித்தரித்து வருகிறது.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அலை உருவாக அந்த சம்பவங்கள் காரணம் அல்ல! பாபர் மசூதி இடிப்பின் எந்த அலையும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு உருவாக காரணம் என்ன?

தமிழக வரலாற்றில், 1997ல், கோவையில் நடந்த கலவரத்தில், அரசு கணக்குப்படி, 19 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 58 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த வன்முறையில் இஸ்லாமியர்கள் மட்டும், கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்தனர். இவை அனைத்தும் நடந்தபோது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தது தி.மு.க.,!

துாண்டப்பட்ட கலவரமா?



அப்போது, புவனகிரி எம்.எல்.ஏ., வாக இருந்தவர் தேசிய லீக் கட்சியை சேர்ந்த ஏ.வி.அப்துல் நாசர். அந்த கட்சி தி.மு.க., கூட்டணியில் இருந்தது. அப்துல் நாசர் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனவர்.

இவர், கோவை கலவரத்தை தி.மு.க., அரசு எப்படி கையாண்டது என்பதை பற்றி தன், 'கோவை கலவரத்தில் எனது சாட்சியம்' என்ற நுாலில் மிக விரிவாக எழுதி உள்ளார்.

இஸ்லாமியர்கள், 19 பேர் கொல்லப்பட்ட சூழலில், கருணாநிதியை சந்திக்கச் சென்ற தன்னிடம் 'உங்க ஆட்கள் தான் எல்லாம் பண்றாங்கையா' என்று கருணாநிதி சொன்னதாக அப்துல் நாசர் பதிவு செய்கிறார்.

அவரது கூற்றுப்படி, 1997 நவம்பர் 29 அன்று சாலை விதிமீறல் வழக்கில் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்தில் அவர்களுக்கும் காவலர் செல்வராஜ் என்பவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதே நாள், இரவில், உக்கடம் பகுதியில் அந்த மூன்று இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து காவலர் செல்வராஜை கொலை செய்தனர்.

காவல் துறையினரின் தேடுதலையடுத்து, அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கே அந்த மூன்று இளைஞர்களும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்த சம்பவம் கைதோடு முடிந்திருக்க வேண்டியது. ஆனால் காவல்துறையோ தங்களில் ஒருவருக்கு நடந்த பயங்கரத்திற்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

நவம்பர் 30 அன்று, 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கோவையில் ஊர்வலமாக சென்று, மறியலில் ஈடுபட்டு வன்முறையை தொடங்கினர். இதுதான் கோவை கலவரத்தின் துவக்கப் புள்ளி.

'ஒரு ஹிந்து காவலரை இஸ்லாமியர்கள் கொன்றனர்' என்று வதந்தி பரப்பப்பட்டு, கலவரம் துாண்டப்பட்டது.

இறந்த காவலரின் பெயர், அந்தோணி செல்வராஜ் என்பதும், அவர் கிறிஸ்துவர் என்பதும் பின்னர் தெரிய வந்தது!

இதை அப்போதே சொல்லி இருந்தால் கலவரம் நின்றிருக்கும். பொதுவாக வதந்திகளால் கலவரம் ஏற்பட்டால் உண்மையை சொல்லி கலவரத்தை நிறுத்த வேண்டிய காவல்துறையே, ஒரு வதந்தியை பரவவிட்டு கலவரத்தை வளர்த்தது.

பல்வேறு மனித உரிமை அமைப்பு களும் இந்த தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகள் காவல் அதிகாரிகள் என்றுதான் அறிக்கைகளைக் கொடுத்தனர்.

ஆனால், 1997 நவம்பரில் காவல்துறை நடத்திய தாக்குதல் தமிழக மக்களிடையே இஸ்லாமியர் மீது பரிதாபத்தை தான் ஏற்படுத்தியது. செல்வராஜின் கொலையை ஒரு மதப் பிரச்னையாக மக்கள் பார்க்கவில்லை. மாறாக, காவல் துறையின் தோல்வியாகவே பார்த்தனர்.

வேடிக்கை பார்த்ததா தி.மு.க.,?



அடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் இஸ்லாமியர் மீதான அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அன்றைய தமிழக அரசு தடுக்க இயலவில்லையா? தமிழக அரசு நடக்கவிட்டு வேடிக்கை பார்த்ததா? என்ற கேள்விகளையும் இந்நுால் எழுப்புகிறது.

தமிழகத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடக்க இருப்பதை முன்கூட்டியே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்; வன்முறையாளர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தமிழக உளவுத்துறைக்கு முன்பே தெரிந்திருந்ததாகவும், தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அப்துல் நாசர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

எளிமையாக சொல்லப் போனால் காவல்துறை மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியைப் போக்க ஒரு தொடர் குண்டு வெடிப்பை வேடிக்கை பார்த்தது தி.மு.க., அரசு என்பதே, இந்நுாலின் சுருக்கமாக உள்ளது. அப்படிப் பார்த்தால், தன் முயற்சியில் அன்றைய தி.மு.க., அரசின் காவல்துறை வென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவை கலவரம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பல காலம் மாறவில்லை. சிறையில் நீண்டகாலம் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்போம் என்று, சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் சொன்ன தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 'அவர்களை விடுவிப்பது சட்டம் - ஒழுங்குக்கு பாதகம் விளைவிக்கலாம்' என்று மறுத்தது.

ஆனால், எஸ்.டி.பி.ஐ., கட்சி அதி.மு.க.,வுடன் கூட்டணி சென்ற பின், தன் நிலைப்பாட்டை மாற்றி கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்தது என்பது அண்மை சம்பவம்.

தேர்தல் காலங்களில் இஸ்லாமியர்களின் தோழனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் தி.மு.க., கலவர காலங்களில் பாதிக்கபட்ட பகுதிகளில் எட்டிகூடப் பார்க்கவில்லை என்பதே கடந்த காலம். 1997ல் என்ன உண்மையிலேயே நடந்தது என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு தி.மு.க.,வை மதச்சிறுபான்மையினரின் தோழன் என, கூறுவது வரலாற்றுப் பிழை. இந்த பிழையை செய்பவர்கள், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருப்பர்.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
24-மார்-2024 08:52 Report Abuse
Kasimani Baskaran தீவிரவாதிகளுக்கும் சராசரி இந்திய விசுவாச இஸ்லாமியர்களுக்கும் தீம்காவுக்கு வித்தியாசம் தெரியாது. ஆகவே தீம்கா இஸ்லாமியர்களின் நண்பன் என்று சொல்வதெல்லாம் முழு அளவு பொய். சாதிக் பாட்சாவுக்கு என்ன ஆனது என்று தெரியும். அடுத்தவருக்கும் அதே கூட நடக்கலாம்.