'கட்டணத்தை திருப்பி கொடு' பன்னீர் ஆதரவாளர்கள் அதிரடி
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் வரை வாங்குவார் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தனக்கு மட்டும் ராமநாதபுரம் தொகுதியை வாங்கிவிட்டு, தன் ஆதரவாளர்களில், யாருக்கும் சீட் வாங்காமல் இருந்து விட்டார். இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகள், 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம், 366 விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். ஒரு விருப்ப மனுவுக்கு, தலா 10,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதில், பல லட்சம் ரூபாய் திரண்டது. விருப்ப மனு கட்டியவர்களில், சிலர் தங்கள் பணத்தை திருப்பி தந்தால் நன்றாக இருக்கும் என, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதற்கிடையில், மாநில நிர்வாகிகள் சிலர், பன்னீர்செல்வத்திற்கு தேர்தல் செலவு செய்வதற்கும் நிதி திரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாவட்டங்களில் உள்ள சில மாவட்ட செயலர்கள், தேர்தல் நிதி கொடுக்க விரும்பாமல், தங்கள் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளனர். சிலர் நிதி கேட்பவர்களின் மொபைல் போன் நம்பரை,' பிளாக்' செய்துள்ளனர். தங்கள் அதிருப்தியை, சினிமா பாட்டு வாயிலாக சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து