அ.தி.மு.க.,வினரை வளைத்த பன்னீர்: பழனிசாமியிடம் கதறிய வேட்பாளர்
ராமநாதபுரத்தில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'சிண்டிகேட்' அமைத்து, திரைமறைவில், 'அரணாக' செயல்படும் அ.தி.மு.க., நிர்வாகிகள் அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியை ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் தொகுதி, 'ஸ்டார்' தொகுதியாக மாறியதற்கு, அங்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வமே காரணம். தி.மு.க., கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியும், அ.தி.மு.க., வேட்பாளராக ஜெயபெருமாளும் போட்டியிடுகின்றனர்.
பன்னீர்செல்வம் தேர்தல் களத்தில் வெற்றி வேட்பாளராக, மாறுவதற்கு தன் முதிர்ச்சியான அரசியல் அனுபவத்தை பயன்படுத்துகிறார். தன் இரு மகன்களையும், மகளையும், மருமகனையும், ராமநாதபுரம் தொகுதியின் ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.
அ.தி.மு.க., வில் உள்ள மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளை தனக்கு ஆதரவாக வளைத்துள்ளார். இதற்காக பக்கா பிளான் போடப்பட்டிருக்கிறது. கூடவே நிறைய வாக்குறுதிகளும் கொடுத்து வாக்காளர்களை வளைக்க முயல்கிறார்.
பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகியுமான சதர்ன் பிரபாகரன், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுத்தினரிடம் செல்வாக்கு பெற்றவர். எனவே, அவரை அத்தொகுதியில் தேர்தல் பணி செய்ய விடாமல், சிதம்பரம் தனித் தொகுதிக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
ராமேஸ்வரத்தின் நகர நிர்வாகியின் மகளும், பன்னீர்செல்வத்தின் மகளும் கல்லுாரி தோழிகள் என்ற அடிப்படையில், ராமேஸ்வரம் பகுதி அ.தி.மு.க., ஓட்டுகள் வளைக்கப்பட உள்ளன.
அப்பகுதியில், முத்துராமலிங்க தேவர் சிலை நிறுவுவதற்கும் பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., முக்கிய நிர்வாகியும், அவரது மனைவியும் ராஜா, ராணி மாதிரி தொகுதியில் வலம் வருகின்றனர். அவர்கள் இருவரும் பன்னீர் அமைத்த சிண்டிகேட்டில் இடம் பெற்று உள்ளனர்.
மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின்படி, நான்கு பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில், 'டம்மி' வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தி.மு.க., சார்பில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில், 2 'டம்மி' வேட்பாளர்கள் உள்ளனர்.
இந்த 6 பேருக்கும் வழங்கப்பட்ட சுயேச்சை சின்னத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சின்னங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து வினியோகிக்கும் ஏற்பாடுகளை செய்ய விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்களிடம் எந்த பன்னீர்செல்வத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருந்த ஏற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பழனிசாமி, ராமநாதபுரம் சுற்றுப்பயணம் வந்தபோது, முன்னாள் மாவட்ட நிர்வாகி ஒருவர், திருவாடனை ஒன்றியத்தில் குறைந்த அளவில் தொண்டர்களை அழைத்து வந்துள்ளார்.
ஆனால், அவரது ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கில் அழைத்து வந்ததாக, வேட்பாளரிடம் கணக்கு காட்டியுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் சிலர் சமுதாய அடிப்படையில் பன்னீர்செல்வத்திற்கு திரைமறைவில் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
'இப்படி பன்னீர்செல்வத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளால், ராமநாதபுரம் அ.தி.மு.க., கலகலத்துப் போய் உள்ளது; அதனால் நான் வெலவெலத்து போயிருக்கிறேன்' என, வேட்பாளர் ஜெயபெருமாள் பழனிசாமியிடம் கதறியுள்ளார்.
இதையடுத்து, அதை சரிபடுத்தும் தீவிரத்தில் பழனிசாமி களம் இறங்கி உள்ளார்.
ராமநாதபுரத்தில் மொத்த அ.தி.மு.க.,வினரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கும் பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் போட்டியிடும் தினகரனும், சிவகங்கை தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கும் தேவநாதனுக்கு எதிராக காய் நகர்த்துவதாக புகார் கிளம்பி உள்ளது. அங்கிருக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து, இருவரும் தேவநாதனுக்கு எதிராக உள்ளடி வேலை செய்வதாக கூறுகின்றனர்.
வாசகர் கருத்து