வானதிக்கு நம்பிக்கையூட்டிய அமித் ஷா
கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவரான எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என பேச்சு அடிபட்டது. ஆனால், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
டில்லியில் சமீபத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலர், கூட்டத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர்.
அப்போது இருவரும் வானதி சீனிவாசனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலான வார்த்தைகளை கூறியுள்ளனர்.
'தமிழகத்தில் குறிப்பாக, கோவையில் பா.ஜ.,விற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். உங்களது தொகுதியில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்த்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உங்களது கட்சிப்பணி தமிழகம் முழுக்க பரவ வேண்டும். அதற்காக மிக உயர்ந்த பொறுப்பு விரைவில் உங்களுக்கு வந்து சேரும்; நம்பிக்கையுடன் இருங்கள். புயல் வேகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து 10 பேர் லோக்சபாவுக்கு வரவேண்டும்' என்று, இருவரும் கூறியதாக வானதி பேசி வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, ''ஆமாம், கட்சித் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்தது உண்மை. கட்சிப்பணிகளை புயல் வேகத்தில் துவக்க வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் போட்டியிடும் மாநில தலைவரை வெற்றிபெறச் செய்வதே எங்களது குறிக்கோள். அதை கட்டாயம் செய்வோம்,'' என்றார்.
வாசகர் கருத்து