வேட்பாளர் புகார்: அன்புமணி அதிரடி
பா.ம.க., தலைவர் அன்புமணியின் அதிரடி நடவடிக்கையால், கடலுார் தொகுதியில் பா.ம.க.,வினர் புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுகின்றனர்.
கடலுார் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பா.ம.க., தலைவர் அன்புமணியிடம், கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என, வேட்பாளர் தங்கர் பச்சான் புகார் அளித்தார். கோபமடைந்த அன்புமணி, நிர்வாகிகளை கண்டித்து, தங்கர் பச்சான் வெற்றிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், திருவிடைமருதுார் ஆலயமணி தலைமையில், கடலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார்.
இதை தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் முன்னிலையில், அனைத்துமட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ரகசிய ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க., மூத்த நிர்வாகிகள், அதிருப்தியாளர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
நிர்வாகிகள், சிலரது செயல்பாடு திருப்தியாக இல்லை என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவற்றை குறிப்பெடுத்துக் கொண்ட மாநில நிர்வாகிகள், 'தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம். வேட்பாளர் தங்கர் பச்சான் வெற்றி பெற்றாக வேண்டும்' எனக் கூறி, தேர்தல் களப்பணிகளை முடுக்கி விட்டனர்.
தொடர்ந்து, நகர, கிராம பகுதியின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி, மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து