நீதி கேட்க ராமநாதபுரம் சரியான தொகுதி: பன்னீர்
''நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி,'' என, தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டி பண்ணை வீட்டில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் பொருளாதார செலவு ஏற்படும். சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க நேரிடும். அந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடியை அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி.
கடந்த 1999ல் பெரியகுளம் லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வெற்றி பெற்று பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அடுத்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ராஜ்யசபா எம்.பி., ஆனார்.
அவரது எண்ணம், செயல், இதயம், தேனியை சுற்றி இருந்ததை அறிவேன். தேனி தொகுதியில் தினகரன் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் தினகரன் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
தேனி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என, கூட்டணி கட்சி தலைமை, தொண்டர்கள் விரும்பினர். தினகரன் விரும்பியதால் நன்றி கடனை தெரிவிக்கும் வகையில், இத்தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்தோம்.
அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த போராட்டம் வெற்றி அடைந்து, அது ஒரு சக்தியாக வெளிப்படும் தொகுதி ராமநாதபுரம் தான். ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். நீதி கேட்க ராமநாதபுரம் சரியான தொகுதி என்பதால், இங்கு போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து