முதல்வர் என்பதால் சலுகை வழங்க முடியாது: கெஜ்ரிவாலை விளாசிய நீதிபதி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை எப்படி விசாரணை செய்ய வேண்டும் எனக் கூற முடியாது' என, நீதிபதி தெரிவித்தார்.
டில்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ல் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தாலும் முதல்வராக தொடர்வார் என ஆம் ஆத்மி அறிவித்தது. அதேநேரம், லோக்சபா தேர்தல் நடைபெறும் சூழலில் கைது செய்திருப்பது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு முரணானது என்பதால் ஜாமீனில் விடுவிக்குமாறு கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு டில்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பிலும் கெஜ்ரிவால் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும்போது இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர் ஆக ஒப்புக் கொண்டதாக கெஜ்ரிவால் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை எப்படி விசாரணை செய்ய வேண்டும் எனக் கூற முடியாது.
முதல்வர் என்பதற்காக எந்த சலுகையையும் வழங்க முடியாது. சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம்... அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் என வகுக்க முடியாது. தேர்தல் நடக்கும் நிலையில் தன்னை கைது செய்ததாக கூறுவதையும் ஏற்க இயலாது.
இந்த வழக்கு மத்திய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே உள்ள பிரச்னை கிடையாது. இது அமலாக்கத்துறைக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே ஆனது. ஆதாரங்களுடன் தான் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் அப்ரூவர் அளித்த வாக்குமூலத்தை சந்தேகிப்பது என்பது நீதிபதி, நீதிமன்றத்தை சந்தேகிப்பது போல் ஆகிவிடும். நீதிபதிகள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், அரசியலுக்கு அல்ல.
இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். எனவே, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல. அவரை கைது செய்தது செல்லும்" எனக் கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாசகர் கருத்து