தொழிலதிபர்களிடம் கருத்து கேட்கும் பா.ஜ., மேலிடம்
'தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கிறது; பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றிக்கு இன்னும் என்னென்ன பணி செய்ய வேண்டும்' என, தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம், பா.ஜ., மேலிடம் கருத்து கேட்டு வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைக்கு ஏற்ப, தொகுதிகளில் பிரசாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என, கட்சி நிர்வாகிகளை, மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்ப, பிரசாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பா.ஜ.,வினரும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இதனால், தேர்தல் அறிவிப்புக்கு முன் இருந்த அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற பேச்சு தற்போது கிடையாது; பா.ஜ., ஐந்து இடங்களில் வெற்றி பெறும் என்றும், பல தொகுதிகளில் இரண்டாம் இடம் கிடைக்கும் என்றும் பேசப்படுகிறது.
இதற்கிடையில் இந்த எண்ணிக்கையை கூட்டுவதற்காக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என, பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதால், கட்சியினர் உற்சாகம் அடைந்து, தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். தலைவர்களின் வருகைக்கு, மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, மக்களின் மன நிலை அறிந்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட, தமிழக தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கிறது; தேர்தல் வெற்றிக்கு இன்னும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரிடம், கட்சி தலைமை கருத்து கேட்டு வருகிறது.
அதற்கு ஏற்ப, தலைமை சொல்லும் ஊர்களுக்கு பா.ஜ., நிர்வாகிகள் அனுப்பப்பட்டு, ஊரின் பொது பிரச்னையை தீர்த்து வைக்க உத்தரவாதம் அளிப்பது, மக்கள் விரும்பும் வகையில் இரவில் குழுவாகக் கூடி பிரசாரம் செய்வது போன்ற செயல்களில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து