கூட்டணியை மாற்றும் வேடந்தாங்கல் பறவை: அன்புமணியை சாடிய பழனிசாமி
"கூட்டணியை நம்பி அ.தி.மு.க., இல்லை. மக்களுக்கு எங்களின் சொந்த பலத்தில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளோம்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்
செய்தியாளர்களிடம் பழனிசாமி பேசியதாவது:
வேடந்தாங்கல் பறவையைப் போல, அடிக்கடி கூட்டணியை அன்புமணி மாற்றிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
ஒரு பேட்டியில் பா.ஜ.,வுக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள் என ராமதாஸிடம் கேட்டபோது, பூஜ்ஜியம் தருவேன் எனப் பதில் அளித்தார். அதே கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். இப்போது பா.ஜ.,வுடன் இணைந்து வெற்றி பெறப் போவதாக ராமதாஸ் சொல்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டணியில் இணைகிற கட்சி தான் பா.ம.க.,
கூட்டணியை நம்பி அ.தி.மு.க., இல்லை. எங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை வரவேற்போம். அவ்வாறு வராவிட்டாலும் கவலையில்லை. சொந்த பலத்தில் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். கூட்டணியை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை.
அ.தி.மு.க., வேட்பாளர்களில் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். அப்போது தான் கட்சி வளரும். மக்களும் இதைத் தான் விரும்புகிறார்கள்.
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் டீ கூட குடிக்க முடியாது. குடிநீர் பாட்டில் கூட 12 ரூபாய்க்கு விற்கிறது. வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையமே நிர்ணயித்துள்ளது. காரில் போகும்போது டீசலுக்கு செலவு செய்துதானே ஆக வேண்டும். டீசலை ஊற்றாமல் தண்ணியை ஊற்றியா வண்டி ஓட்டுவார்?
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடப்பது முதல்முறையல்ல. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்தினர். இவர்களால் வழக்கு பதியப்பட்ட பிறகு தான் அமலாக்கத்துறை உள்ளே வந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து