பா.ஜ., தொண்டர்களை வெறுக்க வேண்டாம்: கெஜ்ரிவால் கடிதம்
"என்னை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க முடியாது. விரைவில் வெளியில் வந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்" என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டில்லியில் தனியார் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் 2,800 கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அதனை கெஜ்ரிவால் நிராகரித்தார். இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கில் டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியோ, கடந்த 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதனால், தன்னையும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்பதால் டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவரை, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்கள் கஸ்டடிக்குள் அமலாக்கத்துறை கொண்டு வந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை செய்தியாளர்கள் முன்னிலையில் சுனிதா வாசித்துக் காட்டினர்.
அதில் கூறியிருப்பதாவது:
என்னுடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நான் சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து சேவை செய்வேன். என் வாழ்க்கையில் நிறைய போராடினேன். இந்தக் கைது நடவடிக்கை என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை.
என்னை கைது செய்துவிட்டதால், பா.ஜ., உறுப்பினர்களை வெறுக்க வேண்டாம். அவர்கள் நமது சகோதர, சகோதரிகள். நான் சிறையில் இருப்பதால் சமூக நலப் பணிகள் எதுவும் நின்றுவிடக் கூடாது என ஆம் ஆத்மியின் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவை பலவீனப்படுத்தும் சக்திகளிடம் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த சக்திகளை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும். என்னை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க முடியாது.
நான் சிறையில் இருப்பதால் பெண்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும். சிறையில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து