வன்னியர் தொகுதியில் மூன்று உடையார் வேட்பாளர்கள்!
பா.ஜ., கூட்டணிக்குள்ளும் புகுந்து கலாட்டா செய்கிறாரே என பா.ஜ.,வினரே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைச்சர் பொன்முடியின் அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக கள்ளக்குறிச்சி தொகுதியில் பரபரப்பாக பேசுகின்றனர்.
இதென்ன கூத்து என கள்ளக்குறிச்சியில் விசாரித்தபோது விபரம் அறிந்தவர்கள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக மலையரசனும், அ.தி.மு.க., வேட்பாளராக குமரகுருவும் போட்டியிடுகின்றனர். இருவரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தங்கள் ஜாதி அடையாளத்தை எங்கும் அவர்கள் காட்டிக் கொள்வதில்லை. ஏனெனில், கள்ளக்குறிச்சி வன்னியர்களும், பட்டியல் சமூகத்தினரும் அதிகம் வாழும் தொகுதி.
அதே நேரம், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக தேவதாஸ் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவரும் உடையார் இனத்தைச் சேர்ந்தவர் தான்.
ஆனாலும், பா.ம.க., அவருடைய பெயரை அறிவிக்கும்போது, தேவதாஸ் உடையார் என குறிப்பிட்டிருக்கிறது.
அதுவும் வன்னியர்களை பிரதானப்படுத்தும் பா.ம.க.,வில் ஏன் இவர் வேட்பாளர் ஆக்கப்பட்டார் என்பதே சுவாரசியமான கதை. இதில் தான் அமைச்சர் பொன்முடி பின்புலமாக இருந்து செயல்பட்டு இருப்பது வெளிப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.,வுடன் தொகுதி ஒப்பந்தம் செய்து கொள்ளும் முன், தங்களுக்கு வேண்டிய தொகுதிகள் குறித்து பட்டியல் கொடுத்தது பா.ம.க., அதில், திருவண்ணாமலை தொகுதி இருந்தது; கள்ளக்குறிச்சி இல்லை. ஆனால், தொகுதிகள் முடிவாகி பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலைக்கு பதிலாக கள்ளக்குறிச்சி இடம்பெற்று இருந்தது.
இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என பா.ம.க.,வின் முக்கிய புள்ளிகளை கடந்து வேறு யாருக்கும் தெரியவில்லை. இந்த மாற்றத்துக்கும், சில மர்மங்களுக்கும் காரணம் அமைச்சர் பொன்முடி தான் என, கூறப்படுகிறது.
அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், பா.ம.க., தரப்போடு சேர்ந்து பொன்முடி சில அரசியல் உள்விளையாட்டுகளை நிகழ்த்தி இருப்பதாகவும் பா.ம.க.,வினர் பேசுகின்றனர். பொன்முடி கைகாட்டிய நபரான தேவதாஸ் உடையாரை, பா.ம.க., வேட்பாளராக அறிவித்ததும் இதனால் தான் என்கின்றனர்.
வன்னியர்கள் பிரதானமாக இருக்கும் தொகுதியில் பா.ம.க.,வும் உடையார் வேட்பாளரை நிறுத்தியதற்கு காரணம் என்ன? அ.தி.மு.க., வேட்பாளர் பொன்முடிக்கு நெருக்கமாக இருப்பதால், தி.மு.க., வேட்பாளரின் கதி என்ன? இப்படி பல மர்மங்கள் இந்த தொகுதியில் வலம் வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து