விடிய விடிய நடித்த வேட்பாளர்கள் தேர்தல் பிரசார வீடியோ தயாரிப்பு
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்காக, 40 வேட்பாளர்களை வைத்து, விடிய விடிய வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்ட நிலையில், புதிதாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதிய சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில், வேட்பாளர்களை வைத்து பிரசார வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கென சினிமா பாணியில் இயக்குனர், துணை இயக்குனரை வைத்து, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தயாரிப்பு செலவை ஒரு மசாலா தயாரிப்பு நிறுவனம் ஏற்றுள்ளதாகதெரிகிறது.
வேட்பாளர் மருத்துவம் படித்திருந்தால், அவருக்கு ஒரு டயலாக்; வக்கீல் என்றால் அவருக்கு வேறு டயலாக்; பொறியாளர் என்றால் அவருக்கு ஒரு டயலாக் என, பல வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 21ம் தேதி காலை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வேட்பாளர்கள், அண்ணாநகரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கு விடிய விடிய படப்பிடிப்பு நடத்தப்பட்டுஉள்ளது.
சமூக வலைதளங்களில், இந்த வீடியோக்களை பரப்ப வேண்டும். பிரசார வாகனத்தில் அதை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்ப வேண்டும்.
தேர்தல் செலவிற்கு உண்டியல் ஒன்றையும், பிரசார வாகனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தயங்காமல் அனைவரிடமும் கேட்டு நிதி வசூலித்துக் கொள்ள வேண்டும் என, வேட்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து