சிவகங்கை தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள் நாளை முடிவில் தெரியவரும்
திருப்பத்தூர்: சிவகங்கை தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளதால், நாளை நடக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிவில் யாரின் வெற்றிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது தெரியவரும்.
சிவகங்கை தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 1967 ல் தான் இங்கு முதல் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த 14 லோக்சபா தேர்தலில் காங்.,9, தி.மு.க.,--அ.தி.மு.க.,- த.மா.கா., தலா 2 முறை வென்றுள்ளது.
15 லோக்சபா தேர்தலில் சிவகங்கையில் பா.ஜ.,- காங்.,- அ.தி.மு.க.,- நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 20 பேர் போட்டியிட்டனர். அந்தவகையில் நாளை நடக்க இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிவின்படி, எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தீர்மானிக்கும் சக்தி பெண் வாக்காளர்களிடம் தான் உள்ளது.
தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட சிவகங்கையில் தான் அதிகளவில் பெண்கள் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். இத்தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 84,843 பேர் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர்.
இதன் மூலம் சிவகங்கையின் வெற்றி கட்சியை தீர்மானிக்கும் சக்தி பெண் வாக்காளர்களிடமே உள்ளது. நாளை வெளியாகும் தேர்தல் முடிவின்படி மீண்டும் 9 வது முறையாக காங்., சிவகங்கையை கைப்பற்றுமா என்பது தெரியும்.
அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடிக்க போகும் கட்சிகள் எது எனவும் தெரியவரும்.
வாசகர் கருத்து