கரூர் தொகுதியில் மனித பட்டிகள் தயார்
கரூர் லோக்சபா தொகுதியில் சில இடங்களில், பட்டிகள், கொட்டகைகள் அமைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே, தேர்தலில் அதிகமாக பணம் புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. கரூர் மாவட்டத்தில், 2016 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிகளவில் பணம் வினியோகம் செய்யப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
கடந்த, 2021 தேர்தலில், கரூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க.,வில் செந்தில் பாலாஜி போட்டியிட்ட போது, பஞ்சாயத்து, வார்டுகளில் மக்கள் அமர வைக்கப்பட்டு தினமும், 100 முதல், 200 ரூபாய் வரை வழங்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பாளராக இருந்தார். அங்கு ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதுபோல, வாக்காளர்களை கொட்டகை, திருமண மண்டபங்களில் அமர வைத்து மனித பட்டிகளை தி.மு.க.,வினர் உருவாக்கியிருந்தனர்.
அவர்களுக்கு அங்கேயே மூன்று வேளை சாப்பாடு, டீ, காபி, ஜுஸ், மோர் பரிமாறப்பட்டன. அவர்களுக்கு, 200 முதல், 500 ரூபாய் வரை தினமும் வழங்கப்பட்டது.
தற்போது கரூர் லோக்சபா தொகுதியில், மனித பட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் நகர்ப்புற வார்டுகள், கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு இடங்களில் தகரம், கீற்றுகளில் கொட்டகைகள் போடப்பட்டுள்ளன. அதில், 200 பேருக்கு மேல் அமர வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் மேற்கு ஒன்றியம், அ.தி.மு.க., இளைஞர் பாசறை செயலர் பெரியசாமி, தேர்தல் கமிஷனிடம் மொபைல் செயலியில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, தேர்தல் அலுவலர்கள், அந்த இடங்களில் ஆய்வு செய்தனர். தனியார் இடத்தில், சொந்த வேலைக்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது என, புகார் அளித்தவருக்கு செயலியில் தேர்தல் அலுவலர்கள் பதில் அளித்துஉள்ளனர்.
வார்டு, பஞ்., தோறும் ஒரே மாதிரியாக கொட்டகைகள், தேர்தல் நேரத்தில் ஏன் அமைக்கப்பட வேண்டும். அதில், மக்களை அமரவைத்து பணம் பட்டுவாடா நடக்கும் என்று தெரிந்தும், தேர்தல் அலுவலர்கள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாசகர் கருத்து