வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட கூடாது: 'இண்டியா' கூட்டணியில் திடீர் சர்ச்சை
'வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, இ.கம்யூ., கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவில்லை. நாடு முழுவதும் கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட பட்டியலை கடந்த 2ம் தேதி பா.ஜ., வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 8ம் தேதி 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
அதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதே தொகுதியில் கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி சார்பில் இ.கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜா களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
இந்நிலையில், 'வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, இ.கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
டி.ராஜா கூறியதாவது: பா.ஜ.,வை எதிர்த்து போராடி வீழ்த்துவதே, இண்டியா கூட்டணியின் முதன்மை நோக்கமாக உள்ளது. நாட்டின் அரசியமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றவும் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதும் கூட்டணியின் நோக்கம்.
கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி உள்ளது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இடது முன்னணி போட்டியிட்டது. வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், ராகுல்காந்தியை போன்ற ஒரு நபர், இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிட வேண்டுமா... எனவே, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோற்ற ராகுல், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இதனை கணக்கில் வைத்து மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
'தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், வயநாடு தொகுதியில் போட்டியிடப் போவதை ராகுல் வாபஸ் பெறுவாரா?' என்ற கேள்வி, இண்டியா கூட்டணிக்குள் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து