கள்ளத்தனத்தால் காங்கிரசில் வந்த சிக்கல்
திருச்சி லோக்சபா தொகுதி உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு காலம் இருந்த திருநாவுக்கரசருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
'காங்கிரஸ் மாநிலத்தலைவராக இருந்த தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான எனக்கே இந்த நிலைமையா? பல முறை அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தொடர்ச்சியாக இருந்ததோடு, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக இருந்திருக்கிறேன்.
'தலைமுறை கடந்து அரசியல் தலைவராக இருக்கும் எனக்கு, திருச்சி 'சீட்' மறுத்ததில் திட்டமிட்ட சதி இருக்கிறது' என வெளிப்படையாக புலம்பிக் கொண்டிருக்கிறார் திருநாவுக்கரசர்.
அவர் திருச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, காங்கிரசில் இருப்பவர்களே திட்டமிட்டு, தி.மு.க., மற்றும் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியான ம.தி.மு.க.,வுடன் பேசி, தொகுதியை காங்கிரசுக்கே இல்லாமல் செய்து விட்டதாக அரசியல் வட்டாரங்களில்பரபரப்பாக பேசுகின்றனர்.
எதுவும் செய்யவில்லை
காங்., வட்டாரங்களில் விசாரித்தபோது கூறியதாவது:
திருநாவுக்கரசர் அ.தி.மு.க.,வில் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ததில், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., என்ற கட்சியை நடத்தினார்.
பின், கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்தார். அதற்கு பலனாக அவருக்கு வேறு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
சில ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர், திடுமென காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தமிழக காங்., தலைவர் பதவி அளிக்கப்பட்டது. கடந்த 2019ல் தி.மு.க., கூட்டணியில் திருச்சி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டு, போட்டியிட்டார்; வெற்றி பெற்றார்.
அவர் போட்டியிட்டு வென்று வந்த அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிட, அவருடைய மகனுக்கு காங்கிரஸ் சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. மகன் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.
திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசர், தொகுதிக்கென்று பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதனால், அவருக்கு திருச்சியில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. கட்சியினரோடும் இணக்கமாக இல்லாததால், லோக்கல் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, திருநாவுக்கரசர் மேற்கொண்ட ஒரு முயற்சி அவருக்கு எதிராகி விட்டது.
திருச்சி தொகுதியை கொடுக்கக்கூடாது என்பதில், சொந்தக் கட்சியினரை விட தி.மு.க., உறுதியாக இருக்கும் அளவுக்கு சென்று விட்டது.
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து எடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில் இணைக்க அவர் முயற்சி செய்தார் என்ற தகவல் தான், தி.மு.க., தலைமையைஎரிச்சல் அடைய வைத்தது.
இதை ராகுல் வரை கொண்டு சென்ற தி.மு.க., அவருடைய ஒப்புதலோடு தொகுதியை இல்லாமல் செய்து விட்டது. ஏற்கனவே, லோக்கல் காங்கிரசாரோடு மோதலில் இருந்ததால், திருநாவுக்கரசர் அழுத்தம் கொடுத்தும் தொகுதியை வாங்க முடியாமல் போய்விட்டது.
தி.மு.க., திட்டமிட்டே தொகுதியை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கி விட்டது.
எப்படியாவது இம்முறையும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அவர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏதாவது ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், திருநாவுக்கரசருக்கு சீட் இல்லாமல் போனால், அவர் மாற்றுத் திட்டத்துக்கு போவார் என்பதை கணக்கிட்டு, இப்போதே பா.ஜ., தரப்பில் இருந்து அவருக்கு அழைப்பு சென்றுள்ளது. அவரும் சீரியஸாக அதை யோசித்துக் கொண்டிருக்கிறார்.
தன் மகன் காங்., தரப்பில் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், மாற்று முடிவு எடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
இவ்வாறு அவ்வட்டாரங்களில் கூறினர்.
இதேபோல, ஆரணி தொகுதியை இம்முறை கூட்டணியில் தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால், அந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி.,யான விஷ்ணு பிரசாத்துக்கு தொகுதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
விவாதம்
இதன் பின்னணி குறித்து காங்கிரசார் கூறியதாவது:
விஷ்ணு பிரசாத் பரம்பரையாக காங்., இயக்கத்தவர். அவருடைய அப்பா கிருஷ்ணசாமி, காங்., மாநிலத் தலைவராக இருந்தவர்.
வன்னியர் இனத்தைச் சேர்ந்த இவருக்கென்றே, தி.மு.க,கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் போட்டியிட்டுஎம்.பி.,யானார். ஆனால், காங்.,கில் ஏற்பட்ட சில கசப்புகளை அடுத்து, விரக்தியில் இருந்த அவரை பா.ஜ.,வினர் அணுகி, தங்கள் பக்கம் வருமாறு கேட்டுக் கொண்டனர்.
அது தொடர்பாக, விஷ்ணு பிரசாத் பலரிடமும் விவாதித்திருக்கிறார். விவாதித்தவர்களில் சிலர் விஷயத்தை காங்., தலைவர் ராகுலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதனால், விஷ்ணு பிரசாத் மீது அதிருப்தி அடைந்த காங்., தலைமை, இம்முறை தி.மு.க.,விடம் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டது. அதற்கு பதிலாக, ராகுலின் நண்பர் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறையை கேட்டு வாங்கி விட்டது.
இவ்வாறு காங்கிரசார் கூறினர்.
வாசகர் கருத்து