கேரளாவில் மீண்டும் வெடிகுண்டு கலாசாரம் : தேர்தல் நேரத்தில் மா.கம்யூ.,விற்கு சிக்கல்
கேரள மாநிலம், கண்ணுாரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து, மா.கம்யூ., தொண்டர் பலியானது அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கண்ணுார், அரசியல் கலவரங்களுக்கு பெயர் போன பகுதி. மா.கம்யூ.,- காங்கிரஸ், -பா.ஜ., தொண்டர்களுக்கிடையே பயங்கர மோதல்கள் ஏற்படுவது அங்கு சர்வ சாதாரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு சராசரியாக மாதத்திற்கு இரண்டு அரசியல் கொலைகள் நடந்தன. வெடிகுண்டு வீசுவதும், வெட்டிக் கொல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.
வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும் போது மூன்று கட்சியினரும் சேர்ந்து சமாதானப் பேச்சு நடத்துவர். அதன் பின் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இருக்காது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் கண்ணுார் மாவட்டம் பானுார் பகுதியில, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து, ஷெரின் என்ற மா.கம்யூ., தொண்டர் பலியானார்.
தேர்தலில் கலவரத்தை துாண்டுவதற்காகத் தான் வெடிகுண்டு தயாரிப்பில் மா.கம்யூ., ஈடுபட்டதாக காங்கிரஸ், பா.ஜ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறுகையில், ''தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர்கள் வெடிகுண்டு கலாசாரத்தை மீண்டும் துவங்கிஉள்ளனர். மா.கம்யூ., ஒரு தீவிரவாத கட்சியாக மாறிவிட்டது. அக்கட்சியை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றார்.
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மன் கூறுகையில், ''கம்யூனிஸ்ட்கள் வெடிகுண்டு கலாசாரத்தை மீண்டும் துவங்கியுள்ளனர். அவர்களது வன்முறை அரசியலை எவ்வளவு நாள் தான் கேரள மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பர்,'' என்றார்.
முஸ்லிம் லீக் தலைவர் ஷாஜி கூறுகையில், ''இந்தத் தேர்தலுடன் மா.கம்யூ.,விற்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரம் ரத்தாகிவிடும். அதனால் தற்போதுள்ள அரிவாள், சுத்தியல் சின்னம் அவர்களுக்கு கிடைக்காது. எனவே அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வெடிகுண்டு சின்னத்தை ஒதுக்குவது தான் மிக சிறப்பாக இருக்கும்,'' என்றார்.
இதற்கிடையே குண்டு தயாரிப்பு சம்பவம் தொடர்பாக மூன்று மா.கம்யூ., தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் 'வெடிகுண்டு தயாரிப்பில் எங்களது கட்சியினருக்கு எந்த தொடர்பும் இல்லை. இறந்தவர் மா.கம்யூ.,வை சேர்ந்தவர் அல்ல' என்று அக்கட்சி மாநில செயலர் கோவிந்தன் கூறியுள்ளார். எனினும், குண்டு வெடித்து இறந்தவர் வீட்டிற்கு மா.கம்யூ., பகுதி செயலர் உட்பட நிர்வாகிகள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து