சிறையில் இருந்தாலும் தேசத்துக்கு சேவை செய்வேன்: கெஜ்ரிவால்
"என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டில்லியில் தனியார் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் 2,800 கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அதனை கெஜ்ரிவால் நிராகரித்தார். சமீபத்தில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியோ, அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதுவரையில் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தன்னையும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்பதால் டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். "லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் கெஜ்ரிவாலை கைது செய்யும் முடிவில் அமலாக்கத்துறை உள்ளதால், அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" என்றனர்.
இதையடுத்து, 21ம் தேதி இரவு கெஜ்ரிவாலின் டில்லி இல்லத்துக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்திய பிறகு இரவு 9 மணியளவில் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்துவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக ஊடங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "நான் சிறையின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் என்னுடைய வாழ்க்கை தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தவாறே நாட்டுக்கு சேவை செய்வேன்" என்றார்.
வாசகர் கருத்து