தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுக்கு அடுத்து, பெரிய சக்தியாக உள்ளது, பாட்டாளி மக்கள் கட்சி. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள இக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி மருத்துவம் படித்தவர். தமிழக, தேசிய, சர்வதேச அளவிலான அரசியல் அறிந்தவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். நம் நாளிதழ் தேர்தல் களத்திற்கு, அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், தேர்தல் அறிக்கையில் பல இலவசங்களை அறிவித்துள்ளன. நிதிச்சுமை உள்ள நிலையில் அவை சாத்தியமா?
அரசு மட்டுமின்றி, மக்களும் கடுமையான நிதிச்சுமையில் உள்ளனர். அதைக் குறைப்பது நல்ல அரசின் கடமை. மக்களின் நிதிச்சுமையை குறைக்க முற்படும்போது, அரசின் நிதிச்சுமை அதிகரித்தாலும் தவறில்லை. தற்போதைய கொரோனா சூழலில், மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை.
குடும்ப தலைவியருக்கு மாதம், 1,500 ரூபாய், ஆண்டுக்கு, ஆறு காஸ் சிலிண்டர்கள் இலவசம், கல்விக்கடன், நெசவாளர் கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியத்தை, 2000 ரூபாயாக உயர்த்துதல் போன்ற அறிவிப்புகளும், ஏற்கனவே செயல்படுத்திய பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடிகளையும், நான் இலவசமாக பார்க்கவில்லை. அத்தியாவசியமானதாகவே பார்க்கிறேன்.
வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும் என்ற, அ.தி.மு.க., அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
அதனை இலவசமாக வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை விட, அதன் தேவை தான் முக்கியம். வாஷிங் மெஷின் என்பது, பெண் விடுதலைக்கான கருவியாகும். குடும்பத்தில் அனைத்து வேலையையும், ஊதியம் பெறாத பணியாளராக பெண்கள் தான், இழுத்து போட்டு செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரால் வாஷிங் மெஷினை வாங்க முடியாது. அரசு வழங்கினால், அவர்களின் பணிச்சுமை பெரிய அளவில் குறையும்.
ஒரு குடும்பத்திற்கு, ஒரு நாளைக்கு துணி துவைக்க, 100 லிட்டர் தண்ணீர் செலவாகிறதுஎன்றால், வாஷிங் மெஷினை பயன்படுத்தும் போது 10 லிட்டர் தண்ணீர் போதுமானது. மீதி, 90 லிட்டரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு ஒரு குடும்பம் வாயிலாக, ஒரு மாதத்தில், 2,700 லிட்டரும், ஆண்டுக்கு, 32 ஆயிரத்து, 400 லிட்டர் தண்ணீரும் மிச்சமாகும். அந்த வகையிலும், வாஷிங் மெஷின் அவசியமாகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில், 23 தொகுதிகள் பெற்றது உண்மையில் திருப்தி தானா?
பா.ம.க.,வை பொறுத்தவரை, இது மாறுபட்ட தேர்தல். இந்த தேர்தலில், ராமதாஸ் அவர்களின், 40 ஆண்டு கால போராட்டம், உணர்வு, தியாகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. சமூக, கல்வி ரீதியாக மிகமிக பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியது, எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி. இதனால், எங்களுக்கான தொகுதிகளை தெரிந்தே குறைத்துக் கொண்டோம். அவ்வாறு குறைத்து கொண்டதால், எங்கள் வலிமை குறைந்து விடவில்லை. இதுவே, எங்கள் தேர்தல் யுக்தி.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால், மற்ற ஜாதியினர் அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக ஓட்டளிப்பர் என்ற பேச்சு அடிபடுகிறதே?
இது, தி.மு.க.,வால் துாண்டி விடப்படும் பொய் பிரசாரம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சமூகநீதி நடவடிக்கை. ஜாதி சார்ந்த நடவடிக்கை அல்ல. இந்த இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையும் இன்றி, அரசு வழங்கவில்லை. கடந்த, 1970ல் தாக்கலான சட்டநாதன் மற்றும் அம்பாசங்கர், ஜனார்த்தனம் ஆணையங்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இது, மிகவும் நியாயமானது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 20.8 சதவீதம். அவர்களுக்கான இட ஒதுக்கீடு அளவு 20 சதவீதம். அம்பாசங்கர் மற்றும் ஜனார்த்தனம் ஆணையங்களின் கணக்கீட்டின்படி வன்னியர்கள், 13.6 சதவீதம், பிற சமுதாயத்தினர், 7.2 சதவீதம். 20 சதவீதத்தில் வன்னிய மக்களுக்கு, 10.5 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 7.2 சதவீத மக்களுக்கும், 9.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இது, மக்கள் தொகையை விட அதிகம். அதனால், பிற சமுதாயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அவர்கள், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக அணி திரள்கின்றனர் என்பது கற்பனை.
எல்லா கருத்து கணிப்புகளும், தி.மு.க.,விற்கு ஆதரவாக உள்ளதே...
இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும், தி.மு.க., ஆதரவு ஊடகங்களால் வெளியிடப்பட்டவை. மக்கள் மத்தியில், தி.மு.க.,வுக்கு ஆதரவான நிலை இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில், 2001 முதல் இப்போது வரை, எந்த சட்டசபை தேர்தலிலும் கருத்து கணிப்புகள் வென்றது இல்லை. கடந்த, 2001 தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும் என, எல்லா கணிப்புகளும் கூறின. ஆனால், அ.தி.மு.க., வென்றது. 2011, 2016 தேர்தல்களிலும், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றன. அப்போதும்,அ.தி.மு.க.,வே வென்றது. தி.மு.க., ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. இப்போது,நிம்மதியாக இருப்பதால், இதே அரசு தொடர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
அ.ம.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் போன்ற கட்சிகளால், ஓட்டுகள் சிதறடிக்கப்படுமா?
அந்தந்த கட்சிகளுக்கு என்று, குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. அதை, அந்த கட்சிகள் பெறும். அந்த ஓட்டுகள், தமிழக தேர்தல் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது.
தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இல்லாதது பாதகமாக இருக்குமா?
நிச்சயமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேர்தல் முடிவுகள் அதை நிரூபிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து