கெஜ்ரிவால் பதவி விலகட்டும்: ஆம் ஆத்மி போராட்டத்தால் கொதிக்கும் பா.ஜ.,
பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி குவிந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். வரும் மார்ச் 28ம் தேதி வரையில் அமலாக்கத்துறையின் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
"கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தபடியே அரசை வழிநடத்துவார்" என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
டில்லி முதல்வரை கண்டித்து இன்று (மார்ச் 26) பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. இதையடுத்து, பிரதமரின் இல்லத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமரின் இல்லம் அருகே உள்ள படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில்கள் மூடப்பட்டன.
இருப்பினும், பிரதமரின் இல்லத்தை நோக்கித் திரண்டு வந்த ஆம் ஆத்மி தொண்டர்களிடம், 'போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. நகரில் பேரணியோ ஊர்வலமோ நடத்துவதற்கு அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்' என போலீசார் எச்சரித்தனர். இதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆம் ஆத்மியின் இந்தப் போராட்டம் பா.ஜ., தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ஜ., எம்.பி., ஹர்ஷவர்தன் கூறுகையில், "ஊழல் வழக்கில் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும். தனக்கு பாதுகாப்பு இல்லை என அவர் நினைக்கிறார். அதனால் தான் முதல்வர் பதவியில் நீடிக்கிறார்" என்றார்.
வாசகர் கருத்து