அமைச்சரான பொன்முடி: நன்றி சொன்ன ஸ்டாலின்
பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றதற்கு, உச்ச நீதிமன்றத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு ஆளானார். இதையடுத்து, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., ஆகிய பதவிகளை இழந்தார். உயர் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் பொன்முடியின் தண்டனை நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், 'மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்' எனக் கூறி ராஜ்பவனுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இதனை ஏற்க மறுத்த கவர்னர் ஆர்.என்.ரவி, "தண்டனையை நிறுத்தி வைத்து தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர, பொன்முடி குற்றவாளி இல்லை எனக் கூறவில்லை" என விளக்கம் அளித்தார்.
கவர்னரின் பதிலை ஏற்காத தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில், கவர்னரின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. கவர்னருக்கு நீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் விதித்ததால், ராஜ்பவனில் இன்று எளிமையாக பதவியேற்பு விழா நடந்தது.
பின், எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம், உரிய நேரத்தில் தலையிட்டு அரசியல் சாசன உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளது. இதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் ஜனநாயகம் சிதைவதையும் கூட்டாட்சி தத்துவம் வாடிப் போவதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தவறான செயல்பாடுகளையும் கண்டு வந்துள்ளனர்.
வரும் 2024 தேர்தல் என்பது ஜனநாயகத்தை காப்பாற்றவும் அரசியல் அமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. தேசத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அதிகாரத்தைத் தடுக்க கடுமையாக பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து