வச்சது ஒரு பேரு! அர்த்தம் வருது வேறு!
வாக்காள பெருங்குடி மக்களே!
நம்ம ஊர்ல நிறைய கட்சி இருக்கு. கட்சி பேர்ல திராவிடம், கழகம்னு அரைச்ச வார்த்தையே அரைக்கிறாங்க. ஆனா, நடக்குற சில விஷயங்கள பாக்குறப்ப, கட்சியின் பேருக்கு அர்த்தமே வேற மாதிரி யோசிக்க தோணுது.
நம்ம 'ஆளவந்தாரை' எடுத்துக்குங்க. அவர் செய்யிறத பாத்தா ஆளவே வர மாட்டார் போலிருக்கு. ஒண்ணும் ஒர்த் இல்லாத கட்சியெல்லாம் கூட தி.மு.க., கிட்ட அஞ்சு குடு ஆறு குடுன்னு கேட்ட நேரத்துல, எனக்கு பூஜ்ஜியத்த குடுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தாரு. உலகத்துலேயே முதல் தடவையா இப்டி ஒரு கூட்டணி கோரிக்க வச்சிருக்காங்கன்னு நெனிக்கிறேன்.
கேட்ட தி.மு.க.,காரன் ஆடி போயிருப்பான். தி.மு.க.,காரன் மட்டுமில்ல மக்களும் ஆடிபோயிட்டாங்க. நீங்க எதிர்காலத்துல கட்சிய நடத்துவீங்களான்னு மக்களுக்கு கடுமையான ஐயம் இருக்கு. அதனால, 'மக்கள் நீதி மையம்'ங்கிறத 'மக்கள் நீதி ஐயம்'ன்னு வச்சா கரெக்டா இருக்கும்.
சரி, அவர் சினிமாக்காரர், நாலும் செய்வாருன்னு யோசிச்சா; 'நாட்டாமை' இது என்ன பிரமாதம்னு, கூட்டணி பேசப்போன இடத்துல கட்சியவே குடுத்துட்டு வந்துட்டாறுங்க. 'என்னங்க இப்டி பண்ணிட்டீங்க'ன்னு 'சித்தி' பாணீல நிர்வாகிங்க கேக்க, 'நல்லா துாங்குறப்ப நடு சாமத்துல தோணிச்சு. உடனே மனைவியை எழுப்பி கேட்டேன். அவரும் தலையாட்டினார். அதான்...'ன்னு அஸால்டா சொல்லிட்டாரு.
இப்படி தமிழ்நாட்டு அரசியல்ல சாமத்துல ஒரு வரலாற்று சம்பவம் நடந்ததுனால, உங்க கட்சி பேரை 'சமத்துவ மக்கள் கட்சி'ங்கிறதக்கு பதிலா 'சாமத்து மக்கள் கட்சி'ன்னு வச்சிருக்கலாம்.
உலக வரலாற்றை உள்ளங்கையில வச்சிருக்கிறார்னு சொல்றோமே வைகோ; வரலாறு ஒரு சுழற்சின்னு ஆழமா எதையாவது புரிஞ்சுகிட்டாரோ என்னவோ, தி.மு.க.,வ எதிர்த்து தொடங்கின தன்னோட மறுமலர்ச்சி தி.மு.க.,வ இணைக்காத குறையா மறுபடியும் மறுபடியும் தி.மு.க.,வோட கூட்டணில கொண்டு தள்ளுறாரு. 'மறுமலர்ச்சி தி.மு.க.,'வுக்கு பதிலா 'மறுபடியும் தி.மு.க.,'ன்னு வச்சா ரொம்ப பொருத்தமா இருக்கும்.
துக்கடா கட்சிகள் தான் இப்டி துக்கத்துல இருக்குதுன்னா, அ.தி.மு.க., மாதிரி பெரிய கட்சி நெலமையும் சொல்லிக்கிற மாரி இல்லீங்க. கூட்டணி வைக்கிறதுக்குள்ள அவஸ்தைப்பட்டு திணறி திண்டாடிட்டாங்க. அதனால 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்'ங்கிறதுக்கு பதிலா 'அவஸ்தைப்பட்டு திண்டாடும் முன்னேற்றக் கழகம்'னு வச்சா அம்சமா இருக்கும்.
ஏம்பா...ஆளுங்கட்சிக்கு மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டியான்னு நீங்க யோசிக்கிறீங்க. அதுக்கும் கைவசம தோணில கஜா எறக்கின 'சரக்கு' இருக்கு. போதை கடத்தல், லாட்டரி பணம்னு வரிசையா வில்லங்கமான விஷயம் வெளி வருது. அந்த கட்சியும் தேர்தல் நேரத்துல இந்த மேட்டர்லாம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம திருதிருன்னு முழிக்குது. அதனால, 'திராவிட முன்னேற்ற கழகம்'னு இருக்கிறத 'திருதிருன்னு முழிக்கிற கழகம்'னு மாத்திடலாம்னு தோணுது. என்ன சொல்றீங்க?!
-எம்.எஸ்.தண்டபாணி
வாசகர் கருத்து