ஜெ.,வால் நீக்கப்பட்டவருக்கு சீட்: ஜெ., பற்றி பிஎச்.டி., செய்தவருக்கும் சீட்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவரும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவருமான தமிழ்மணியை, நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக அக்கட்சியின், மாவட்ட வர்த்தகர் அணி செயலர் தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, திருக்காடுதுறையை சேர்ந்தவர். தற்போது, கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கோவை ப.வேலுாரில், ஆயில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
வேட்பாளர் தமிழ்மணி, அரசு வேளாண் துறையில் பணியாற்றினார்; 1984ல் விருப்ப ஓய்வு பெற்றார். 2009ல், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் ராவணன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.
கடந்த, 2012ல் சசிகலாவை ஜெ., நீக்கிய போது, தமிழ்மணியும் நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின், மீண்டும் கட்சியில் இணைந்தார். அவருக்கு, நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலராக பதவி வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் நெருங்கியதும், 'பசை' உள்ள பார்ட்டியாக தமிழ்மணி வெளிப்பட்டார். அதற்கு முன்னோட்டமாக, மாவட்டம் முழுதும், மக்கள் மத்தியில் தன் பெயர் பதியும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினார். அதையடுத்தே தற்போது சீட்டும் பெற்றுள்ளார். கட்சிப் பணி செய்யாதவர், பெயரளவுக்கு மட்டுமே கட்சியில் இருந்தவர், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு சீட் வழங்கப்பட்டதாக தற்போது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
பிஎச்.டி., செய்தவர்
கோவை தி.மு.க., வேட்பாளராக முனைவர் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், 'ஜெயலலிதா- எழுச்சிமிகு அரசியல் தலைவராக உருவெடுத்தது - ஓர் ஆய்வு'என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டவர்.
முதுகலை இதழியல் படித்துள்ள ராஜ்குமார், கல்லுாரி காலத்திலிருந்தே அ.தி.மு.க.,காரர். கவுன்சிலர், மண்டலத் தலைவர் என பல பதவிகளை வகித்த இவரை, 2014ல் கோவையின் மேயராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதுவும் 2011ல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செ.ம.வேலுச்சாமியை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தல் நடத்தி, இவரை மேயராக்கினார்.
ஆனால், 2016 சட்டசபைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கோவையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அ.தி.மு.க.,விலும் வேலுமணியின் கை ஓங்கியது. மேயராவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்த வேலுமணிக்கும், இவருக்கும் பல விவகாரங்களில் முட்டல், மோதல் நடந்தது.
ஜெ., மறைவுக்குப் பின் அது உச்சமாக, தி.மு.க.,வுக்குத் தாவினார் ராஜ்குமார். பின், 2021 சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தி.மு.க.,வேட்பாளராவதற்கான போட்டியில் இறுதியாக இருந்த 3 நபர்களில் இவரும் ஒருவர். அவர்களில் டாக்டர் மகேந்திரன், தேர்தலுக்குப் பின் கமல் கட்சியிலிருந்து வந்தவர்; அவர் போட்டியிட்டால் பிரசாரத்துக்கு கமலே வரமாட்டார். அது மட்டுமின்றி, அவர் செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
டாக்டர் கோகுலை பொறுத்தவரை ஆ.ராஜாவின் ஆதரவாளர்; கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கும், அவருடைய பெரிய மாமனார் பொங்கலுார் பழனிசாமி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆக இருவர் பெயரும் கழிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியாக அ.தி.மு.க., இருந்தபோதே, அங்கிருந்து விலகி தி.மு.க.,வுக்கு வந்ததற்காக, ராஜ்குமாருக்கு வேட்பாளர் அங்கீகாரத்தை, தி.மு.க., தலைமை வழங்கியுள்ளது.
வாசகர் கருத்து