'வெற்றியை விரும்பாத கோவை தி.மு.க.,' முதல்வருக்கு வந்த ஒரு குமுறல் கடிதம்
முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., தொண்டர் எழுதிய கடிதம்:
லோக்சபா தேர்தலில், கோவை மாவட்டம் முழுதும், 20 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலராக, அமைச்சராக இருந்து பணியாற்றிய பொங்கலுார் பழனிசாமியை முழுமையாக, மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் புறக்கணித்து விட்டனர்.
அவரோடு இருந்த மாவட்ட நிர்வாகிகளாக, ஒன்றிய செயலர்களாக, நகர செயலர்களாக பணியாற்றிய எல்லாரையும் முழுமையாக, எந்த பதவிக்கும் போடாமல் புறக்கணித்து விட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்சி பதவிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததிலும், கோவை மாவட்ட நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். 'டாஸ்மாக்' கடைகளில், அ.தி.மு.க., ஆட்சியில் யாரெல்லாம் மதுக்கூடம் எடுத்து நடத்தினரோ, அவர்களை தான் இப்போதும் அனுமதித்துள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் ஒரு மதுக்கூடம் கூட கொடுக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி 'டெண்டர்' உள்ளிட்ட எல்லா வேலைகளிலும், மாவட்ட நிர்வாகிகள் ஆசி பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர் யாருக்கும் எந்த பணியும் கொடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள அரிசி வியாபாரிகள், கிரானைட் கல் எடுப்பவர்கள், ஜல்லி உடைக்கும் உரிமையாளர்கள், எம் - சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தொழிலதிபர்களிடம், மாவட்ட நிர்வாகிகள், சேலம் இளைஞரணி மாநாடு, தேர்தல் பணி சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்றிய நகர, மாநகர மாவட்டத்தில், பகுதி வட்ட செயலர் வீரர்கள் கூட்டம் அதிக அளவில் நடத்தியது கிடையாது. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளிலும், 50 சதவீதத்திற்கும் மேல் நியமிக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை எழுதி கொடுத்து விட்டனர்.
தி.மு.க.,வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கிற முக்கிய கட்சி பிரமுகர்கள், யாரையும் மதிப்பதில்லை; அடியோடு புறக்கணித்து விட்டனர். தமிழகம் முழுதும் ஒட்டுமொத்த தலைவராக நீங்கள் பொதுக்கூட்டங்களில் பேசி, சுற்றுப்பயணம் செய்கிறீர்கள்.
ஆனால், கோவை மாவட்ட நிர்வாகிகள், யாரையும் மதிப்பதில்லை; வேட்பாளர்களோடு பெயருக்கு செல்கின்றனர். இவர்கள் எல்லாம் எம்.பி.,யாகி விட்டால், அரசு நிகழ்ச்சியில் முதல்வருக்கு அருகில் அமருவர். நாம் எதிரில் மக்களோடு மக்களாக உட்கார வேண்டும். இவர்கள் யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒன்றிய அளவில் அழைத்து பேசவில்லை; கூட்டம் நடத்தவில்லை. இது தான் இன்றைக்கு இருக்கிற நிலைமை. சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை.
கோவை தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், முறையாக சுற்றுப்பயணம் பட்டியல் போட்டு, தினசரி 100 கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு செல்ல வேண்டும்; அந்த பணியை இதுவரை செய்யவில்லை. எங்கள் சொந்த பணத்தை போட்டு, தேர்தல் பணியாற்றுவதற்கு வசதி இல்லை. கட்சிக்கு விரோதமாக, உங்களிடத்தில் சிரித்து பேசி ஏமாற்றும் மாவட்ட நிர்வாகிகளை, நீங்கள் நம்பாதீர்கள். அவர்கள் கட்சியை அழித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து