தமிழ் கலாசாரத்தை மோடியால் தொட்டுப் பார்க்க முடியாது: ராகுல் சவால்
"நாட்டில் 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கின்றனர். இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்ததை விட சமச்சீர் அற்றதாக தற்போதைய நிலை இருக்கிறது" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பேசினார்.
திருநெல்வேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது
நான் தமிழகத்தை மனதார நேசிக்கிறேன். தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்க்கிறது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்.
அதன் கலாசாரம், தொன்மையான பண்பாடு, அற்புதமான கவிஞர்கள், அவர்கள் சிந்தனையின் தாக்கம் என்னை ஈர்க்கிறது. இந்த மொழியை நான் படிக்கவில்லையென்றாலும் அதன் சரித்திரத்தை படித்திருக்கிறேன். இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக தமிழகத்தைப் பார்க்கிறேன்.
உலகுக்கு ஈ.வே.ரா, அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை கொடுத்துள்ள மண் இது. சமூகநீதியின் பாதையில் எப்படி நடக்க முடியும் என்பதை நீங்கள் தான் தெரியப்படுத்துகிறீர்கள்.
எனது பாரத் ஜோடா யாத்திரையை தமிழகத்தில் இருந்து தொடங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 4000 கி.மீ பாதையிலும் இந்த மண்ணின் மகத்துவத்தை சொல்வதற்காக நடந்தேன்.
தமிழ் மண்ணுக்கு வரும்போதெல்லாம் உங்கள் பண்பாடு, கலாசாரத்தின் முன்பு தாழ்மையுடன் வருகிறேன். இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் இருந்து தான் பண்பாட்டு தரவுகளை படிக்க முடியும்.
தமிழகத்துக்கு நான் வரும்போது தமிழக மக்கள் என்னை நேசித்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு உறவை நான் எங்கேயும் பார்த்ததில்லை. இது அரசியல் உறவல்ல. அது குடும்ப உறவு. அது அவர்களை ஆத்மார்த்தமாக நேசிக்கும் உறவு.
இந்த மண்ணின் விவசாயிகள் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தியபோது என் உறவினர்களே போராடுவதைப் போல் உணர்ந்தேன். இந்தியாவில் இன்று பெரிய தத்துவ போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈ.வே.ரா., போன்ற தாலைவர்கள் போதித்த சமூகநீதி, சமத்துவம், விடுதலை... மறுபுறம் மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும் துவேஷமும்.
ஒரு நாடு ஒரு தலைவர் ஒரு மொழி என மோடி சொல்கிறார். இந்தியாவில் உள்ள எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததல்ல. என்னைப் பொறுத்தவரை பொருத்தவரை அனைத்து மொழிகளும் கலாசாரமும் வரலாறும் சமமானவை.
தமிழ், வெறும் மொழி அல்ல. ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வாழ்வு முறை. தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.
தமிழக மக்களும் மொழியும் கலாசாரமும் எல்லாவற்றை விட எனக்கு முக்கியம். தமிழ் மொழி மற்றும் இதர மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற நாடே இருக்காது.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் கலாசாரமும் புனிதமானது என கருதுகிறோம், ஆனால், ஒரே நாடு என்பதில் பா.ஜ.,வினர் உறுதியாக உள்ளனர். நாட்டில் இன்று 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கின்றனர். இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்ததை விட சமச்சீர் அற்றதாக தற்போதைய நிலை இருக்கிறது.
நாட்டில் உள்ள 70 சதவீத சொத்துகளை 25 பெரிய பணக்காரர்கள் வைத்துள்ளனர். இந்தியாவில் தினம்தோறும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய பிரதமருக்கு மனம் கிடையாது. ஆனால் நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டும் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். சில பணக்காரர்கள் மட்டும் நாட்டின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர்.
விமான நிலையம், துறைமுகம், மின்சாரம் வளம் என அனைத்து துறைகளையும் அதானியிடம் மோடி ஒப்படைத்துள்ளார். சிறுகுறு நடுத்தர தொழில்கள் உள்ளிட்டவை ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பால சீரழிந்துவிட்டன.
இந்தியாவின் அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிரப்பிவிட்டனர். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரி ஆகிய துறைகளை எதிரிகளை அழிக்கும் ஆயுதமாக மாறிவிட்டது.
தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தேர்வு செய்கிறார், காங்கிரசின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் முடக்கப்படுகிறது, 2 மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகின்றனர். 3,4 பணக்காரர்களுக்கு மட்டும் அனைத்து துறைகளிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதித்த போது மத்திய அரசு நிதி தர மறுத்தது. நீங்கள் கொடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. தமிழக மீனவர்களுக்கும் மோடி அரசு உதவி செய்யவில்லை.
தமிழக விவசாயிகள் ஜந்தர்மந்தரில் போராடிய போது எதுவும் கிடைக்கவில்லை. நாட்டின் ஊடகங்களை மோடி தன் கையில் வைத்துள்ளார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும்' என்கிறார் பா.ஜ., எம்.பி., ஒருவர்.
ஜனநாயகத்தின் தாய் இந்தியா என கூறிய காலம் மாறி ஜனநாயகம் அழிந்து போகும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க விரும்புகிறோம்.
30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை இளைஞர்களுக்கு வழங்கப்படும். இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உருவாக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளித்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.
தமிழக மக்களின் கல்வி முறையை அவர்களே முடிவு செய்வார்கள். நீட் தேர்வை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்ற சட்டம் கொண்டுவரப்படும்
மோடி பணக்கார்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளார், நாங்கள் விவசாயிகளுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். தேசத்தின் எதிர்காலத்தை பெண்கள் தான் நிர்ணயிக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்களுக்கு சமமான உரிமையைக்கூட வழங்கவில்லை.
ஏழை பெண்களுக்கான திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அவர்களுக்கு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு ஏழை குடும்பங்களும் மாதத்திற்கு 8500 வீதம் வருடத்திற்கு 1 லட்ச ரூபாயை பெருவார்கள்.
நாட்டில் ஏழ்மையை ஒழிக்க இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளது மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்கப்படும்.
நாட்டில் உள்ள மீனவர்களை மோடி மறந்துவிட்டார். அவர்களைப் பற்றி பிரதமர் நினைப்பது கிடையாது, விவசாயிகளுக்கு நிகரானவர்கள் மீனவர்கள். அவர்களுக்காக தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளளோம்.
மீனவ படகுகளுக்கு டீசல் மானியம், காப்பீடு, கடன் அட்டை என அங்கீகரிக்கப்பட்ட விவசாயமாக மீனவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். உங்களின் பண்பாட்டுக்காக இண்டியா கூட்டணி செய்யும் யுத்தம் தான், இந்த தேர்தல். மோடி மட்டுமல்ல உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாசாரத்தைத் தொட்டுப் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து