ஜூன் 4ல் கொங்கு மண்டலம் யாருக்கு என பார்த்துவிடலாம்: அண்ணாமலை சவால்
"மோடியின் உத்தரவாதம் என்பது தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பது தான். பா.ஜ., உள்ளே வந்துவிடும். அது மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:
ஆட்சியில் தி.மு.க., இருக்கிறது. மத்தியில் நாங்கள் இருக்கிறோம். 10 ஆண்டுகால மோடி ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டனர். தி.மு.க., இன்னும் 27 மாதங்கள் ஆட்சியில் இருக்கப் போகிறது. தேர்தல் களத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தான் போட்டி நடக்கிறது.
களத்தில் யார் போட்டியோ அவர்கள் மீதுள்ள தவறை மக்கள் மன்றத்தில் மோடி வைத்துள்ளார். பழனிசாமியை ரோடு ஷோ போகச் சொல்லுங்கள். எவ்வளவு பேர் கூடுகிறார்கள் எனப் பார்ப்போம். ஒரு பிரதமர், மக்களுக்கு ஆறடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
ஆறடிக்கு மேடை போட்டுப் பேசுவது ஜனநாயகம் அல்ல. இது மக்கள் தரிசன யாத்திரை. டி.ஆர்.பி.ராஜாவின் அப்பா ஒரு சமூக விரோதி. சாராயம் விற்பவரின் மகனாக அவர் பேசுகிறார். எப்.ஐ.ஆரில் உள்ளவர்கள் மட்டும் சமூக விரோதியல்ல.
சாராய விற்பனையின் மூலம் எத்தனை பெண்களில் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். 'என் அப்பா சாராயம் விற்கவில்லை' என டி.ஆர்.பி.ராஜா சொல்லட்டும்.
தி.மு.க., ஆட்சியில் புதிதாக சாராய ஆலை ஒன்றை டி.ஆர்.பாலு கட்டியபோது, அங்கு தடியடி நடத்தப்பட்டது. இன்றும் கறுப்பு நாளாக மக்கள் அனுசரிக்கின்றனர். அதனால் தான் தஞ்சையில் டிஆர்பாலு தோற்றார். இவர்கள் சமூக விரோதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
மோடியின் உத்தரவாதம் என்பது 2024க்குப் பிறகு கோபாலபுரத்தின் ஊழல் குடும்பம் உள்ளே போகும். தி.மு.க.,வின் சமூக வலைதள பிரசாரத்துக்காக 7 கோடியே 39 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளனர். இந்தக் கம்பெனியின் உரிமையாளராக சபரீசன் இருக்கிறார். ஆட்சியில் கொள்ளையடிக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் வந்து கொட்டுகின்றனர்.
மோடியின் உத்தரவாதம் என்பது தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பது தான். பா.ஜ., உள்ளே வந்துவிடும். அது மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். 'மாமன்னன்' படத்தை உதயநிதி எடுத்தார்.
அதில், கெட்டவர்கள் எல்லாம் வடக்கிலும் நல்லவர்கள் எல்லாம் தெற்கிலும் இருப்பதைப் போல காட்டுவார்கள். கெட்டவன் என்றால் ஜி என்ற வார்த்தையைப் பேசுவார். இதன்மூலம் ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். இவை சுக்குநூறாக உடைந்துவிடும்.
நேற்று ஒரு குழந்தைக்கு ரோலக்ஸ் என உதயநிதி பெயர் வைத்தார். கமல் நடித்த 'விக்ரம்' படத்தில் ட்ரக் விற்பவரின் பெயர் ரோலக்ஸ். ஆனால், அவர் மத்தியில் அரசியல் மாற்றம் பற்றி பேசுகிறார். வாரிசுகளுக்கெல்லாம் ஸ்டாலினின் வாரிசு பிரசாரம் செய்கிறார்.
ஜூன் 4ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது. அன்று கொங்கு மண்டலம் யாருடையது எனப் பார்த்துவிடலாம். கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் ஊழல் நடந்துள்ளது. பினாயில் வாங்குவதில் இருந்து அனைத்துப் பொருள்களிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
ஊழலுக்கும் தேர்தல் போட்டிக்கும் சம்பந்தம் இல்லை. யாராவது தைரியமாக ஊழல் குற்றச்சாட்டை வெளியிட்டால் தமிழக கேபிளில் சேனல் இருக்காது. தமிழகத்தில் ஊடகம் சுதந்திரமாக இருக்கிறதா. எத்தனை பேரை மிரட்டுகிறார்கள்.
வேட்டி சட்டை ஊழலுக்கு ஆதாரம் இருக்கிறது என்றால் அதைப் போடுவதில்லை. 2024க்கு பிறகு எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்குப் போகக் போகிறார்கள் எனப் பாருங்கள். ஐதராபாத்தில் 2.50 லட்சம் செல்போன்களை ட்ராப் செய்தனர். அவர்கள் எல்லாம் கைதாகி சிறையில் உள்ளனர்.
என்னைக் கண்காணித்து சிறையில் இருந்தபடியே செந்தில்பாலாஜி பேசினால் எல்லாம் மாறிவிடுமா. கோவையில் பண அரசியலை ஒழிக்க முடியும் என நம்புகிறேன். பண அரசியல் என்ற பேய் ஓட்டப்படும். ஆயிரம் ரூபாய், மூக்குத்தி, டப்பாக்கள் என எல்லாவற்றையும் கொடுப்பதற்காக குடோனில் வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆட்சி நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. ஊடகங்களை கண்காணிக்கிறார்கள். உளவியல்ரீதியான தாக்குல்களை தி.மு.க., நடத்துகிறது. தி,.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்வது, சாதாரண வேலையல்ல.
உலகில் மிக மோசமான ரவுடிகள் தி.மு.க.,வில் உள்ளனர். 'முதல்வர் சொன்னதால் அமைதியாக இருக்கிறேன். இல்லாவிட்டால் அண்ணாமலை நடமாட முடியாது' என சேகர்பாபு மிரட்டுகிறார். என்னைப் பற்றி நடந்த தாக்குதலுக்கு பிரதமர் பதில் சொன்னார்.
2026ல் இவர்களின் கொட்டத்தை அடக்கி ஓட விட வேண்டும். இவர்களை மாற்றாவிட்டால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. எனக்கு அதிகாரத்தின் மீது ஆசையில்லை. அரசியலில் எனக்கு நண்பர்கள் கிடையாது. நண்பர்கள் அதிகமாக இருந்தால் உண்மை பேச முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து