பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் சவால்!

குழந்தையை கடைக்கு அழைத்துப் போனால், ஷெல்பில் இருக்கும் விளையாட்டுச் சாமான்களையும், தின்பண்டங்களையும் பார்த்தவுடன், 'அதை வாங்கு, இதை வாங்கு' என்று அடம் பிடிக்கும். முடியாது என்று சொல்ல முடியாமல், கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ, எல்லாவற்றையும் பெற்றோர் வாங்கிக் கொடுப்பர். காங்கிரஸ் தலைமை இதைத் தான், தன் 2024 தேர்தல் அறிக்கை தயாரிப்பில் செய்திருக்கிறது. தேர்தல் அறிக்கை குழுவில் இப்படியெல்லாம் பேச்சு நடைபெற்று இருக்குமோ என்று, சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ராகுல்: 'நீட்' வேண்டாம்.

கார்கே: சிக்கல் தம்பி. சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருக்கு.

ராகுல்: ஆனா, அதை ஒழிக்க ஏதோ ரகசியம் இருக்குன்னு உதயநிதி பிரதர் சொன்னாரே.

கார்கே: என்ன தம்பி, அத போயி நம்புறீங்க? சரி, இப்படி சொல்லுவோம். யாருக்கு வேணுமோ வெச்சுக்கலாம்.

ராகுல்: 'ஜி.எஸ்.டி' வேண்டாம்

கார்கே: அய்யோ... தம்பி... எல்லாம் டமாலாயிரும்.

ராகுல்: மக்கள் விரும்பல கார்கே-ஜி

கார்கே: அதை 'ஜி.எஸ்.டி. 2.0' திருத்தி கொண்டு வருவோம்னு சொல்லுவோம். வந்தா தானே! பாத்துக்கலாம்.

ராகுல்: நீங்க எல்லாத்துக்கும் 'நோ' சொல்றீங்க ஜி. நான் அம்மா கிட்ட சொல்லுவேன். ரயில்ல பழையபடி 50 சதவீத சலுகை, கல்வி கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டத்துக்கு தினமும் 400 ரூபாய் சம்பளம், 'ஸிட்டீஸ்'லையும் 100 நாள் வேலை திட்டம்... 'நோ' சொல்லக்கூடாது...

கார்கே: ஓ.கே., தம்பி

ராகுல்: ஸ்டாலின் அங்கிள் லேடீஸ்க்கு மாசம் ஆயிரம் ரூவா குடுக்குறாரே...

கார்கே: 1,000 என்ன தம்பி, 1 லட்சம் குடுப்போம்.

ராகுல்: ஒரு லட்சத்துல 'புவர் பீப்பிள்' எல்லாம் கார் வாங்கிக்கலாம் இல்ல?

கார்கே: அது... எல்லாரும் பாராட்டுவாங்க. அந்த திட்டத்துக்கு 'மகாலட்சுமி'ன்னு மங்களகரமா பேரு வெச்சிடலாம்

ராகுல்: மகாலட்சுமி ஏன், நாம மதச்சார்பின்மை கட்சியாச்சே? 'மும்தாஜ்'னோ, 'இவாஞ்சலீன்'னோ பேரு வெக்கலாமே?

கார்கே: என்னப்பா, டிரெண்டே புரியாம பேசறீங்க. காங்கிரஸை எப்படி ஹிந்துன்னு ஏத்துப்பாங்க?

ராகுல்: நான் பஸ்ல டூர் போகும்போது, நிறைய பேர் வேலை இல்லைனு சொன்னாங்க. எல்லாம் 'யூத்'. என்ன செய்யலாம்?

கார்கே: பிரைவேட் கம்பனி தலைல பிரச்னைய கட்டிடுவோம். படிச்சவங்கள 1 லட்சம் ரூவா சம்பளத்துல அப்ரன்டிஸா சேத்துக்கனும்னு சொல்லிருவோம்.

ராகுல்: ஜி நீங்க ஒரு ஜீனியஸ்! அப்டியே இந்த பார்மர்ஸ் போராட்டத்துக்கு ஒரு தீர்வு சொல்லுங்க...

கார்கே: அது என்னப்பா அவங்க கேக்குற மாதிரி ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம்னு சொன்னா போதும்.

ராகுல்: மறக்காம ஜாதி கணக்கெடுப்பு எழுதிடுங்க ஜி.

கார்கே: நல்லவேளை ஞாபகப்படுத்தினப்பா...



இதுபோன்ற திட்டங்களை எல்லாம் செய்து முடிக்க கோடிக்கணக்கான ரூபாய் வேண்டுமே? அந்த வருவாய்க்கு நம்மிடம் வழி இருக்கிறதா?

அதைப் பற்றியெல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். மக்கள் மனதை குஷிப்படுத்தினால் போதும். அவர்கள் ஆசைகள் எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் கொடுத்துவிட்டால், ஓட்டு போட மாட்டார்களா என்ன? ஆசை வேறு, நடைமுறை சாத்தியம் வேறு என்று யோசிக்க வேண்டாமா? ஆசை வெட்கம் அறியாது மட்டுமல்ல, 'லாஜிக்'கும் அறியாது.



கல்வி கடனை ரத்து செய்ய ஒரு லட்சம் கோடி ரூபாய், 100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு கூடுதலாக 48,000 கோடி, நகர்ப்புற 100 நாள் வேலை திட்டத்திற்கு 1 லட்சம் கோடி, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் திட்டத்திற்கு 3 லட்சம் கோடி என, கிட்டத்தட்ட 5.50 லட்சம் கோடி ரூபாய்க்கு கூடுதல் நிதி சுமையை இந்த அறிக்கையில் உள்ள திட்டங்கள் ஏற்படுத்தும். அந்த பணம் எங்கிருந்து வரும்? தற்போது ஏர்போர்ட், நெடுஞ்சாலை, வந்தே பாரத் ரயில் என உள்கட்டமைப்புக்கு செலவிடப்படும் பணத்தில் இருந்து வரும்.



மக்கள் அடிக்கடி பேசிக்கொள்ளும் விஷயங்களை மிக சாதுர்யமாக அறிக்கையில் சேர்த்திருக்கிறது காங்கிரஸ். அதேநேரம் பா.ஜ., 10 ஆண்டுகளாக செய்த அனைத்தையும் கலைத்துப் போட வேண்டும் என்ற குழந்தைத்தனமான எண்ணத்தையும் இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வது சிரமம் என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், அவர்கள் இந்த வாக்குறுதிகளை கொடுப்பது பா.ஜ.,வுக்கு 'செக்' வைக்கத்தான்.

பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறாரே; நாங்கள் இதை முன்வைத்திருக்கும் நேரத்தில் உங்களால் இலவசங்கள் இல்லாமல் தேர்தல் அறிக்கை வெளியிட முடியுமா? என்ற செக், ஒரு சவால். பா.ஜ., எப்படி சந்திக்கிறது என்பது சுவாரசியமாக இருக்கும்.


Raa - Chennai, இந்தியா
06-ஏப்-2024 15:24 Report Abuse
Raa "....காங்கிரஸ் சவால் " என்பதற்கு பதில் "..
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
06-ஏப்-2024 08:15 Report Abuse
VENKATASUBRAMANIAN ஏமாறும் மக்கள் உள்ளவரை இவர்கள் இப்படித்தான். மக்கள் யோசிக்க வேண்டும்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்