தேர்தல் செலவை தி.மு.க., பார்த்து கொள்ளும்: தங்கபாலு உத்தரவால் காங்கிரசார் 'அப்செட்'
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே கோஷ்டி பூசல்களும் சுவாரசியங்களும் துவங்கி விட்டன.
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார்.
ஆரம்பத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் திருநெல்வேலி காங்.,எம்.பி.,ராமசுப்பு காங்கிரஸ் மாநில செயலர் வானமாமலை ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். வானமாமலை மனு பெறப்படவில்லை. ராமசுப்பு மனு தள்ளுபடி ஆனது.
ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசந்தகுமார், ரூபி மனோகரன் என வெளியூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டதால், எம்.பி., தொகுதியும் மண்ணின் மைந்தர்களுக்கு இல்லாமல் பறிபோய்விட்டது.
வேட்பாளர் ராபர்ட் புரூஸ் காங்கிரஸில் மேல்மட்ட தலைவர்களான சோனியா, ராகுல் ஆகியோருடன் நெருக்கமாக இருப்பதால், சிறுசிறு பிரச்னைகளுக்கும் அங்கு போன் செய்கிறார் என, குற்றச்சாட்டு உள்ளது.
தேர்தல் செலவை போட்டியிடும் வேட்பாளர்கள் தான் மேற்கொள்ள வேண்டியது வழக்கம். ஆனால் திருநெல்வேலியைப் பொறுத்தவரை செலவு முழுதும் தி.மு.க., ஏற்றுக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
அண்மையில் நடந்த காங்., ஆலோசனைக் கூட்டத்தில் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கபாலு பேசுகையில் 'அனைத்து பணிகளையும் தி.மு.க.,வினர் மேற்கொள்வர். காங்கிரசார் அவர்களைப் பின் தொடர்ந்தால் போதுமானது.
நீங்களாக எதையும் செய்ய வேண்டாம்' எனக் கூறியுள்ளார். இதனால் காங்கிரசார் அப்செட் ஆகியுள்ளனர்.
திருநெல்வேலியில் நாம் தமிழர் வேட்பாளர் முதற்கொண்டு சொந்தமாக வாகனத்தில் பிரசாரம் செய்கின்றார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் எல்லா தொகுதி களிலும் தி.மு.க., பிரசார வாகனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறார். திருநெல்வேலியில் மற்ற எந்த கட்சிக்கும் அலுவலகம் இல்லாத காலத்திலேயே காங்கிரசுக்கு பக்காவான அலுவலக கட்டடம் வண்ணார்பேட்டையில் உள்ளது.
ஆனால், அங்கு தேர்தல் அலுவலகம் அமைக்காமல் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் தி.மு.க., கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் அலுவலகம் செயல்படும் என அறிவித்துள்ளனர்.
சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ அமைப்பிலும் ராபர்ட் புரூஸ் பொறுப்பில் உள்ளார். அவருக்கு எதிராக சி.எஸ்.ஐ., அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதனால் அவர்கள் தரப்பு ஆதரவும் கேள்விக்குறியாகியுள்ளது.
மொத்தத்தில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியும் தேர்தல் பணிக்கு தி.மு.க.,வை நம்பியே உள்ளது.
வாசகர் கருத்து