அ.தி.மு.க., பலவீனமான கட்சியா : பழனிசாமி கொதிப்பு
அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டார். இந்த தேர்தலில் 18 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் நேரடியாக போட்டியிட உள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரம் செய்வதற்கான முனைப்பில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில், 16 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இன்று 2வது வேட்பாளர் பட்டியலை பழனிசாமி வெளியிட்டார்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பழனிசாமி பேசியதாவது:
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இந்த சோதனையை சட்டரீதியாக சந்திப்போம். எங்கள் கட்சியில் வெற்றிவாய்ப்பை அடிப்படையாக வைத்து சீட்டுகளை ஒதுக்கியிருக்கிறோம்.
அ.தி.மு.க., வேட்பாளர்களை பொறுத்தவரையில், அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதுமுக வேட்பாளர்கள் இருப்பதில் என்ன தவறு.
அ.தி.மு.க.,வை குறை சொல்வதற்காகவே சில பத்திரிகைகள் உள்ளன. கூட்டணி அமைத்தால் முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுத்ததாக எழுதுகிறார்கள். தேர்தல் சூழலுக்கு ஏற்றவாறு தான் கூட்டணி அமையும்.
அ.தி.மு.க., என்பது பலவீனமான கட்சி அல்ல. சாதியையும் மதத்தையும் பற்றி கேட்காதீர்கள். அவ்வாறு பிரித்து பிரித்து தான் நாடே குட்டிச்சுவராக மாறிவிட்டது.
நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். மதம், சாதியின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் வகையில் கேள்விகளை கேட்க வேண்டாம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து