இது ராசியான கூட்டணி: சொல்கிறார் பிரேமலதா
"எத்தனை போட்டிகள் வந்தாலும் அதை எதிர்த்து இந்தக் கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் 2011ஐ போன்ற வரலாற்றை உருவாக்கும்" என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., -தே.மு.தி.க., இடையே தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அ.தி.மு.க., உடன் தே.மு.தி.க., கூட்டணிப் பேச்சு நடத்தி வந்தாலும் தொடர்ந்து இழுபறியே நீடித்தது. ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் தே.மு.தி.க., பிடிவாதமாக இருந்ததால், கூட்டணிப் பேச்சில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., -தே.மு.தி.க., இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலுார், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறியதாவது:
கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி, மீண்டும் உறுதியாகி உள்ளது. இந்தக் கூட்டணி லோக்சபா தேர்தல் மட்டுமின்றி சட்டசபை தேர்தலிலும் தொடரும். ராஜ்யசபா சீட் குறித்து தெரிவிப்போம்.
எத்தனை போட்டிகள் வந்தாலும் அதை எதிர்த்து இந்தக் கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் 2011ஐ போன்ற வரலாற்றை உருவாக்கும்.
கூட்டணியில் எண்ணிக்கை முக்கியமல்ல. யாருடன் கூட்டணி என்பதே முக்கியம். இது ராசியான கூட்டணி. நாங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்கள் தான், அவர்களும் நல்ல நட்புடன் பழகினர். இம்முறை அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என எங்கள் கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
அனைவரின் ஒப்புதலோடு கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி ,தோல்வியை மக்கள் முடிவு செய்வார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என 3 தெய்வங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
வாசகர் கருத்து