1 தொகுதி போதும் என்றேன்... 2 கிடைத்தது: டி.டி.வி.தினகரன்
"தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு இணையான கட்டமைப்பு அ.ம.மு.க.,வுக்கு உள்ளது. டெல்டாவிலும் தென்தமிழகத்திலும் எங்களுக்கு செல்வாக்கு அதிகம்" என, அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க., இடம்பெற்றுள்ளது. இன்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இதில், அ.ம.மு.க.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பின், டி.டிவி.தினகரன் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அ.ம.மு.க., நிர்வாகிகள் விரும்பினர். அது தொடர்பான பட்டியலை பா.ஜ.,விடம் அளித்தோம். நாங்கள் மாநில கட்சியாக இருப்பதால் கட்சி நிர்வாகிகள் பலரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
துவக்கத்தில் எங்களுக்கு நிறைய தொகுதிகளை பா.ஜ., ஒதுக்கியது. ஆனால், கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதற்காக, சில தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் தயார் என பா.ஜ.,விடம் கூறினோம். எவ்வளவு இடங்கள் என்ற எண்ணிக்கையை முக்கியமானதாக பார்க்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதற்காக இரு தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். சொல்லப்போனால், ஒரு தொகுதியை ஒதுக்கினால் கூட போதும் என்றோம்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு இணையான கட்டமைப்பு அ.ம.மு.க.,வுக்கு உள்ளது. டெல்டாவிலும் தென்தமிழகத்திலும் எங்களுக்கு செல்வாக்கு அதிகம். இங்குள்ள 15 தொகுதிகளில் எங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
வாசகர் கருத்து