பொன்னார் போட்டி ரத்து? தமிழிசையால் சலசலப்பு
கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடப் போகிறார் என்று 90 சதவீதம் முடிவாகி இருந்தது. அவருக்காக இரண்டு இடங்களில் தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தான், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னர் மற்றும் துணைநிலை கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். மேலும், லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் கன்னியாகுமரி பா.ஜ.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பா.ஜ., பிரமுகர் கூறியதாவது:
பொன்னாருக்கு கவர்னர் பதவி தரப் போகின்றனர் என்றும், தமிழிசை கன்னியாகுமரியில் போட்டியிடப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் பொன்னாரிடம், நீங்கள்தான் வேட்பாளர், வேலை செய்யுங்கள் என்று கட்சித் தலைமை கூறி பல மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் வேட்பாளரை மாற்றினால், அதிருப்தியை சரிக்கட்டும் முன்னர் தேர்தலே முடிந்து விடும்.
கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்.,க்கு நெருக்கடி கொடுக்க தமிழிசையை களம் இறக்கப் போவதாகவும் சொல்கின்றனர். அப்படி நடந்தால், அது தம்பியை எதிர்த்து சகோதரி நிற்பதாக ஆகி விடும். பொன்னாருக்கு இது வாய்ப்பு என்பதால் அவரை மேலிடம் ஏமாற்றாது என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து