நிதி மோசடி சர்ச்சையில் பா.ஜ., வேட்பாளர்: காங்கிரஸ், இ.கம்யூ., புகார்
ரூ.525 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சிவகங்கை பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது காங்கிரஸ், இ.கம்யூ., குற்றம் சுமத்தியுள்ளது.
சென்னையில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகையை வைத்துள்ளனர். இந்த நிறுவனம் முதலீடுக்கு ஏற்றார்போல, 10 முதல் 11 சதவீத வட்டி கொடுப்பதாக அறிவித்தது.
ஆனால், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக முதலீட்டார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதில், 150 பேருக்கு கொடுக்கப்பட்ட காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரசின் ஊடகப் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், 125 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் தேவநாதன் 525 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நிதி நிறுவனம் சார்பாக தேவநாதன் யாதவ் அளித்துள்ள காசோலை திரும்பி வந்துள்ளது.
அப்படியிருக்கும் போது அவர் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் அண்ணாமலை எப்படி கையெழுத்து போட்டார். நிதி மோசடிப் புகார் குறித்து தேவநாதன் யாதவை விசாரிக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை பா.ஜ., வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. முதலீடு செய்த தொகையை திரும்பக் கேட்டால் தரமுடியாது என்றும், மீறி போலீசில் புகார் செய்தால் உங்கள் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அச்சுறுத்தியதாகவும் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் இந்த நிதி நிறுவனம் வழங்கிய 150க்கும் மேற்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற முதியோர்கள். தங்கள் வாழ்நாள் பணத்தை முதலீடு செய்து மோசடிக்குள்ளாகி இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவரின் முதலீட்டுத் தொகையும் மீட்டெடுத்து வட்டியோடு அவர்களுக்குத் திரும்பி வழங்க தமிழக அரசும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
500 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ள தேவநாதன் மீது பண மோசடி தடுப்புச் சட்டப்படி அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை சுமந்தபடி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனை கேட்டுக் கொள்கிறோம்.
நிதி மோசடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநராக உள்ள தேவநாதனுக்கு ஓட்டு கேட்டு பிரசாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் ஒன்றாக நின்று தன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுள்ளாரோ என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து