தாமரைக்கு கைகொடுக்கும் இரட்டை இலை
''வானதி! நீ ஜாக்கிரதையா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கணும்... வேலுமணி அண்ணன் கூட பயணிக்கிற வரைக்கும் உனக்குப் பிரச்னையில்லை; எதிரணியில இருந்தா நீ காணாம போயிருவ...!''
கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி க்கு, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் கொடுத்த, சீரியஸ் அட்வைஸ் வீடியோ, இப்போது வைரல் ஆகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இது ஏதோ தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொன்ன அறிவுரையில்லை. கோவை, 'கொடிசியா'வில் சில மாதங்களுக்கு முன், அவருக்கு நடந்த பாராட்டு விழாவில், வி.ஐ.பி.,க்கள், மக்கள் முன்னால் ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சு.
கோவையில் பா.ஜ., சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்று உத்தேசப் பட்டியலில் பெயர் வெளியானாலும், வானதி கோவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும், இன்னும் கை நழுவிப் போகவில்லை என்பதற்கு, ஆதாரமாகத்தான் இந்த வீடியோ பகிரப்படுகிறது.
கடந்த தேர்தலில், கமல் வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்ட நிலையில், வானதியை எம்.எல்.ஏ.,வாக ஜெயிக்க வைத்தது வேலுமணி தான். அதை வைத்தே, ராதாகிருஷ்ணன் இப்படிப் பேசியிருந்தார். அரசியல் ரீதியில் வேலுமணிக்கும், வானதிக்குமான நட்பு, அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.
அ.தி.மு.க.,வில் இரண்டாம் இடத்திலுள்ள வேலுமணி, பா.ஜ.,வுக்குப் போகப் போகிறார் என்ற தகவலை, அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைக்க, அவர் எடுத்த முயற்சியும், பழனிசாமியின் பிடிவாதத்தால் கைகூடவில்லை. இந்நிலையில்தான், கோவையில் வானதியை நிறுத்தினால், வேலுமணியே ஜெயிக்க வைத்து விடுவார் என்று தகவல் பரவி வருகிறது.
அ.தி.மு.க., சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் நிற்க யாரும் விரும்பவில்லை. அதனால் புதிய நபரைத்தான் களம் இறக்கப் போகின்றனர். அப்படி யாரோ ஒருவர் நின்று ஜெயித்தாலும், யாருக்கும் பயனில்லை. ஆனால் வானதி நின்று வென்றால், அவர் மத்திய அமைச்சராக வாய்ப்புண்டு. அதனால் வேலுமணிக்கும் பலனுண்டு. நம் ஊருக்கும் ஏதாவது நன்மை நடக்கும்.
அதனால் அவர் தரப்பிலிருந்து பா.ஜ., மேலிடத்துக்கு ரகசியமாக, 'க்ரீன் சிக்னல்' தரப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஒரு வேளை வானதி நிறுத்தப்பட்டால், அவரை வேலுமணி நிச்சயம் ஜெயிக்க வைப்பார்.
கோவையில் போட்டியிட அ.தி.மு.க., தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில், வானதி போட்டியிடும்பட்சத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட கட்சியில் பலர் காத்திருக்கின்றனர்' என்றார்.
இது குறித்து, பா.ஜ., தரப்பில் கூறியதாவது:
கோவையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலையை களம் இறக்க கட்சி மேலிடம் விரும்புகிறது. ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை. ஒருவேளை, அவர் களம் இறக்கப்பட்டால், பா.ஜ.,விலேயே இருந்து, தொகுதி எதிர்பார்க்கும் சிலர், அ.தி.மு.க.,வுடன் கைகோர்த்து, அண்ணாமலையை வீழ்த்த காத்திருக்கின்றனர்.
அதனால், கோவையில் அண்ணாமலை களம் இறங்கும்பட்சத்தில், எதிரி கட்சியான தி.மு.க.,வைக் காட்டிலும், சொந்தக் கட்சி எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வானதியைப் பொறுத்த வரை, அ.தி.மு.க.,வோடு அரசியல் ரீதியில் நெருக்கம் காட்டினாலும், பா.ஜ., தலைமைக்குக் கட்டுப்படுவார்.
இவ்வாறு அக்கட்சி தரப்பினர் கூறினர்.
வாசகர் கருத்து