இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் : தேர்தல் கமிஷனை அணுகும் பன்னீர்

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்துக்கு, சிக்கலை ஏற்படுத்த பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். இது, பழனிசாமி தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' ஏற்படுத்தி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.அனைத்து மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகிய நிலையில், அக்கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்து, அவர் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், இதுவரை வெளியான தீர்ப்புகள் அனைத்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, கட்சி, சின்னம், கொடி ஆகிய அனைத்தும், பழனிசாமி வசம் உள்ளது. கட்சி பெயரை, கொடியை பன்னீர்செல்வம் பயன்படுத்த, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என, பன்னீர்செல்வம் கூறி வருவது, அ.தி.மு.க.,வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு வாய்ப்பில்லை என, பழனிசாமி தரப்பு கூறினாலும், இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சம், கட்சி நிர்வாகிகளிடம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் கமிஷனில் முறையிட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு முறையிடும்போது, தங்களுக்கு சின்னம் கிடைக்கும். இல்லையெனில், சின்னம் முடக்கப்படும் என்பது, அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து, பன்னீர்செல்வம் கூறியதாவது:
இரட்டை இலை தற்காலிகமாக, ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டும், பழனிசாமி தரப்பிற்கு வழங்கப்பட்டது. நல்ல முடிவு வரும். நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் நிற்போம். இதற்காக, உரிய நேரத்தில் தேர்தல் கமிஷனை நாடுவோம்.
இதுவரை, அ.தி.மு.க.,வை உரிமை கோரும் மனுக்கள் மீது வெளிவந்த தீர்ப்புகள் அனைத்தும் தற்காலிகமானவைதான்.பா.ஜ., உடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். அதற்கான காரியங்களை தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செய்யும். மோடி 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து, நல்ல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமையை எடுத்து சென்றுள்ளார். எனவே, மூன்றாம் முறை பிரதமராக மோடி வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, உலகம் முழுதும் தெரியும். அதை மோடி பாராட்டி உள்ளார்.நாங்கள் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். விருப்ப மனு வாங்கப்பட்டு, வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ''இரட்டை இலை தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்காக உள்ளது. தேர்தல் கமிஷனே அதை கூறியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும்போது, தேர்தல் கமிஷன் நல்ல முடிவு எடுக்கும்,'' என்றார்.
வாசகர் கருத்து