இரட்டை இலை - தாமரை திரைமறைவு டீல்?

தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில், மறைமுகமாக உதவுவதற்காக, அ.தி.மு.க., சார்பில், 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, டில்லி மேலிடம், அ.தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறி விட்டது. அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் பா.ஜ., மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கு, பிரதமர் மோடி, 400 எம்.பி.,க்களுடன் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.,க்களும் தன் மந்திரி சபையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில் அவர், தமிழக மக்கள் மீது வைத்திருக்கும் அதிக பற்றே காரணம்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உறுதியாக கிடைக்கும் என்பதை உளவுதுறை, டில்லி மேலிடத்திடம் அறிக்கை வழங்கியது.
அந்த அறிக்கையில், 'கொங்கு மண்டலத்தில் உள்ள பல தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என்றும், அ.தி.மு.க., கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி நிச்சயம்' என்றும் தெரிவித்துள்ளது.
இதனால், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் பா.ஜ., தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இதற்காக, அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான நபர்களுடன், பா.ஜ., மேலிட பிரதிநிதிகள், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த வாரமும் பேச்சு நடத்தினர்.
ஆனால், கூட்டணியில் இணைய பழனிசாமி தரப்பு மறுப்பதாகவும், அதற்கு தமிழக பா.ஜ., தலைமையை அவர் விரும்பாததும் காரணமாக தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் வாய்ப்பை நழுவ விட கூடாது என்பதற்காக, அ.தி.மு.க.,வோடு கூட்டணி இல்லாத நிலையிலும் பா.ஜ., வெற்றிபெற வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, அ.தி.மு.க.,வின் சில முன்னாள் அமைச்சர்களிடம் இரு தினங்களுக்கு முன், பா.ஜ., மேலிட பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.
அதன்படி, பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் டம்மி வேட்பாளர்களை நிறுத்துவதுடன், தேர்தல் பிரசார பணிகளில் தீவிரம் காட்டாமல் அடக்கி வாசிக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை, மாஜி அமைச்சர்கள், தங்கள் கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளனர். கட்சித் தலைமையும் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப களத்தில் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியாற்றவும் தலைமையிடம் இருந்து விரைவில் தகவல் அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து