இரட்டை இலக்க பிரச்னையால் தி.மு.க., - காங்., கூட்டணி இழுபறி! ம.தி.மு.க.,-வி.சி.,- ம.நீ.ம. பிடிவாதத்தாலும் குழப்பம்

இரட்டை இலக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்ற தமிழக காங்கிரசின் பிடிவாதத்தால், தி.மு.க., - காங்., கூட்டணி இழுபறியாகி உள்ளது. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., - வி.சி., - ம.நீ.ம., கட்சிகளும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என பிடிவாதம் காட்டுவதாலும் குழப்பம் நீடிக்கிறது.

லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., குழுவினர், கூட்டணி கட்சிகளிடம் இரண்டு கட்ட பேச்சு நடத்தியும், தொகுதி பங்கீடு எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஏற்கனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம்; கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

ஒப்பந்தம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காண முடியாமல், தலா இரு தொகுதி களை ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இருந்த போது, டில்லி மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 12 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.தலைவர் பதவியில் இருந்து அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசிய போது, கூடுதலாக மூன்று தனித்தொகுதிகளுடன் மொத்தம் 15 தொகுதிகளை கேட்டனர்.

ஆனால், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர், காங்கிரசுக்கு ஏழு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என கறாராக கூறிவிட்டனர்.

ஒதுங்கி விட்டார்இதையடுத்து, மூன்றாவது கட்ட பேச்சு நடத்த தி.மு.க., தரப்பிலும் அழைப்பு விடுக்கவில்லை; காங்கிரஸ் தரப்பிலும் எப்போது வர வேண்டும் என்று கேட்கவில்லை.

'தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து என்னிடம் எந்த கருத்தும் கேட்க வேண்டாம்; காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் பேசிக் கொள்ளுங்கள்' என, ராகுலும் ஒதுங்கி விட்டார்.

கடந்த லோக்சபா தேர்தலில் இரட்டை இலக்கத்தில், அதாவது தமிழகத்தில் ஒன்பது; புதுச்சேரியில் ஒரு தொகுதி என, மொத்தம் 10 தொகுதிகளை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் பெற்றது. அதில், தமிழகத்தில் எட்டு; புதுச்சேரியில் ஒன்று சேர்த்து, ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது.

எனவே, கடந்த தேர்தலில் புதுச்சேரியுடன் சேர்த்து இரட்டை இலக்கத்தில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை, இம்முறையும் வாங்கினால் தான், தன் தலைமைக்கு கவுரவமாக இருக்கும் என செல்வப்பெருந்தகை கருதுகிறார். அதற்கு மாறாக, ஏழு தொகுதிகளை வாங்கினால், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்; அது, தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்றும் நம்புகிறார்.

எனவே, தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளையும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து, 10 தொகுதிகள் பெற்றாக வேண்டும் என கங்கணம் கட்டி, செல்வப்பெருந்தகையும் மூன்றாம் கட்ட பேச்சுக்கு செல்லவில்லை.

அதற்கு மாறாக, காஞ்சிபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்சிப் பணிகள் தொடர்பாக, வரும் 6ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், ஒடிசா மாநிலத்தில் தங்கியுள்ளார். அவரும், 6ம் தேதி சென்னைக்கு திரும்புகிறார்.

எனவே, 7ம் தேதி சுபமுகூர்த்த நாளாக இருப்பதால், அன்றைய தினம் தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இறுதியாகலாம் என நம்பப்படுகிறது. அதுவரை இழுபறி நிலைமையே நீடிக்கும்.

மற்ற கட்சிகளுக்கு என்ன தான் பிரச்னை?*விடுதலை சிறுத்தைகள் கட்சி, மூன்று தொகுதிகளை கேட்கிறது; தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அடம் பிடிக்கிறது. தனிச்சின்னம் என்றால், அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் தர தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், கூடுதலாக ஒரு தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அக்கட்சியும் தி.மு.க., அழைப்புக்காக காத்திருக்கிறது

*முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்றவற்றுக்கு, அவர்கள் கேட்ட ஒரே தொகுதியை கொடுத்தது போல, ம.தி.மு.க.,வும் தனிச்சின்னம் என்றால், விரும்பிய ஒரு தொகுதி கொடுக்க தயார்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், இரண்டு சீட்டுகளை ஒதுக்கலாம் என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

*காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளை குறைத்து கொடுத்து விட்டு, அத்தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதேசமயம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் கமலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது; அதற்கு அவர் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை மனித நேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், லோக்சபா தேர்தலில் சீட் இல்லை. வரும் 2026 சட்டசபை தேர்தலின் போது, கூடுதல் தொகுதிகள் தரப்படும் என, தி.மு.க., மேலிடம் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'ஓ தாராளமாக தனித்து நிற்கலாமே!'தொகுதிகள் குறைக்கப்பட்டால், தனித்து போட்டியிடுவோம். 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட அனுபவம் உண்டு' என, அக்கட்சியின் கோஷ்டி தலைவர் ஒருவர், தி.மு.க., மூத்த அமைச்சரிடம் தெரிவித்தார்.அதற்கு மூத்த அமைச்சரும், 'ஓ தாராளமாக நீங்கள் தனித்து போட்டியிடலாமே... நாங்கள் இனி டில்லி மேலிடத்தில் பேசிக்கொள்கிறோம்' என, கிண்டலாக பதிலளித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்