இரட்டை இலைக்கே ஓட்டு பா.ஜ., வேட்பாளர் அதிர்ச்சி
கரூர் அருகே நடந்த பா.ஜ., வேட்பாளர் பிரசார கூட்டத்தில், 'இந்த தடவை இரட்டை இலைக்கு ஓட்டு போடுறோம்' என, ஆரத்தி எடுக்க வந்த பெண்கள் கூறியதால், பா.ஜ., வேட்பாளர் அதிர்ச்சிக்குள்ளானார்.
கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், கடந்த 2011ல், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், 2019ல் அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில், இரண்டாவது முறையாக போட்டியிட்டார். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், செந்தில்நாதன் தோற்றார். பின், பா.ஜ.,வில் இணைந்து கரூர் மாவட்ட தலைவரானார்.
தற்போது, கரூர் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளராகி உள்ளார். கடந்த 2ல், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புகழூர் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது, ஆரத்தி எடுக்க வந்த பெண்கள் செந்தில்நாதனை பார்த்ததும், பழைய ஞாபகத்தில், 'இந்த தடவையும் இரட்டை இலைக்கே ஓட்டு போடறோம்' என, தெரிவித்தனர்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த செந்தில்நாதன் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள், 'இரட்டை இலைக்கு போடாதீங்கம்மா; இப்ப தாமரை பக்கம் இருக்கோம். உங்கள் ஓட்டு தாமரைக்குத் தான்' என, தெரிவித்தனர்.
வாசகர் கருத்து