கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி: சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி

கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக கர்நாடகாவை சேர்ந்த கட்சி அறிவித்திருப்பது, நாம் தமிழர் கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட ஏதுவாக கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணைத்தில் நாம் தமிழர் கட்சி மனு கொடுத்திருந்தது. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு ஒதுக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னத்தை ஒதுக்கியதாகவும் நாம் தமிழர் கட்சி தாமதமாக விண்ணப்பித்ததால் சின்னத்தை ஒதுக்க வாய்ப்பில்லை' எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, நாளை வரவுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கட்சி, தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியிட ஏதுவாக கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ளது.

பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சியின் மாநில தலைவர் யோகி ஜெயக்குமார் கூறியதாவது:

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. யார் தூண்டுதலின் பேரிலும் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையம், முறைப்படி எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எங்கள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தொகுதிக்கு 10 பேர் விண்ணப்பித்துள்ளனர். எங்களுடன் கூட்டணி வைத்தால் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு வரவுள்ள நிலையில், பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சியின் இந்த அறிவிப்பு, நாம் தமிழர் நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்